Tamilnadu
அவதூறு பேச்சு... பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரி கைது... புழல் சிறையில் அடைப்பு !
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் பார்ப்பனர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு சமுதாயத்தினரையும், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களையும் குறித்து இழிவாக பேசினார். மேலும், தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையிலும் கலந்துகொண்டு அவதூறு பரப்பும் வகையில் பேசினார்.
தெலுங்கு மக்களை குறித்து இழிவாக பேசிய விவகாரத்துக்கு பலர் மத்தியிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தான் அவ்வாறு பேசவே இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் மழுப்பியதோடு, மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பேசினார். இருப்பினும் கண்டனங்களை தொடர்ந்து நடிகை கஸ்தூரி மீது அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் புகார் அளித்ததன் அடிப்படையில், 4 பிரிவுகளில் எழும்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
மேலும் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், மதுரை திருநகர் காவல்நிலையத்தில் கஸ்தூரி மீதும், நம் தேசம் பாரத் என்கிற யூடியூப் பக்கம் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்தே கஸ்தூரி தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். எனினும் அவரை கைது செய்ய போலீசார் மும்முரம் காட்டி வந்த நிலையில், அவர் தலைமறைவாகியதோடு, நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
இதையடுத்து இதனை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பேச்சுரிமை என்ற பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ அல்லது சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது என்றும், வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கான விளைவுகளை அவசியம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்து, நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தது. இந்த சூழலில் நேற்று (நவ.17) இரவு ஐதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த கஸ்தூரி கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர் இன்று சென்னை அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அதன் பிறகு எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரகுபதி ராஜா, நடிகை கஸ்தூரியை வரும் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!