Tamilnadu
கோவையில் ரூ.300 கோடியில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.11.2024) கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு, அனுப்பர்பாளையம் கிராமத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுதாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும் என்றும், இதில் உலகத்தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் இணைய வளங்களும் இடம்பெறுவது மட்டுமின்றி, விண்வெளி, எந்திரவியல், மெய்நிகர் தோற்றம், இயற்கை அறிவியல் என பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளைச் சார்ந்த வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கோவை மத்திய சிறைச்சாலைக்கு சொந்தமான 6 ஏக்கர் 98 சென்ட் நிலத்தில் (கோவை வடக்கு, அனுப்பர்பாளையம் கிராமம்) 1.98 இலட்சம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
இந்த மையத்தில், தரைத்தளத்தில் ஆடிட்டோரியம் மற்றும் அறிவியல் மையம், முதல் தளத்தில் அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் போட்டி தேர்வுகளுக்கான நூலகம், மூன்றாம் தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ் புத்தகப்பிரிவு மற்றும் சொந்த புத்தகம் படிக்கும் பிரிவு, ஐந்தாம் தளத்தில் தமிழ் புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஆறாம் தளத்தில் பருவ இதழ்கள் மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம், ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. மேலும், 4 மின் தூக்கிகள், 10 KLD கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பேனல் அறை, குடிநீர் மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டடமானது, 2026 ஜனவரி மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், கணபதி பி.ராஜ்குமார், கே.ஈஸ்வரசாமி, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப.,பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா,
இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சோ. மதுமதி, இ.ஆ.ப., பொது நூலக இயக்குநர் (பொறுப்பு) முனைவர் பொ. சங்கர், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!