Tamilnadu
”தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்” : டாடா குழும தலைவரிடம் CM மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக, டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அன்போடு கோரிக்கை விடுத்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "இராணிப்பேட்டை மாவட்டம். சிப்காட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவை முன்னிட்டு, டாடா குழுமத்தின் மரியாதைக்குரிய தலைவர் சந்திரசேகரன் அவர்களை இன்று விருந்தோம்பும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.
எளிமையான பின்புலத்தில் இருந்து உயர்ந்த அவர் இந்திய கார்ப்பரேட் உலகின் மதிப்புமிகு தலைவர்களில் ஒருவராக ஏற்றம் அடைந்து பலருக்கும் ஊக்கமாக விளங்கி வருகிறார். அவரது தலைமையின்கீழ், குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் பெருமாற்றத்தையும் டாடா குழுமம் அடைந்துள்ளது.
பயனுள்ள ஆலோசனைகளை நாங்கள் மேற்கொண்ட இச்சந்திப்பின்போது, டாடா குழுமம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அன்போடு கோரிக்கை விடுத்தேன்.
சந்திரசேகரன் அவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், டாடா குழுமம் தமிழ்நாட்டில் தங்களது திட்டங்களைப் பெருமளவில் விரிவாக்கம் செய்ததைக் குறிப்பிட்டுப் பேசியதையும், நமது திராவிட மாடல் அரசின் வேகத்தையும், எளிதில் அணுகக் கூடிய தன்மையையும், விரைவான இயக்கத்தையும் அங்கீகரித்ததையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.
நாங்கள் தொடர்ந்து இதேபோல டாடா குழும நிறுவனங்களின் தேவைகளுக்கு உடனடியாக, முழுமையாகச் செவி மடுப்பதோடு, எங்கள் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு எல்லா வழியிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இணைந்து பணிபுரிவோம் என அவருக்கு நான் உறுதியளிக்கிறேன். இன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் வெற்றியடைய எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்காக எனது நன்றியையும் உரித்தாக்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!