Tamilnadu
“தமிழ்நாட்டுக்கு இரு மொழிக் கொள்கையே போதுமானது, மூன்றாவது மொழி தேவை இல்லை.” - அமைச்சர் பொன்முடி உறுதி !
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். இதில் கல்லூரியின் பொன்விழா நுழைவாயில் மற்றும் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் பொன்முடி பேசியதாவது, “பேரறிஞர் அண்ணாவின் கூற்றுப்படி, தமிழகத்தில் நமது தாய்மொழியான தமிழ் மற்றும் உலக மொழியான ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையே போதுமானது. இதில் மூன்றாவது மொழி தேவை இல்லை. இந்திய அளவில் விளையாட்டுத் துறையில் தமிழகம் மூன்றாவது இடம் வகிப்பதற்கு காரணம், அந்த துறையின் அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தான்.” என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், ஆளுநர் ஆர்.என். ரவியுடன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “சென்னை பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பட்டமளிப்பு விழா மாணவர்கள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசின் முயற்சியால் நேற்று நடத்தப்பட்டது. அதனால் மாணவர்களின் நலன் கருதி நேற்றையதினம் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றேன்.” என்றார்.
தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்ற முதலமைச்சரின் பேட்டி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இது குறித்து முடிவு எடுக்க வேண்டியவர் முதலமைச்சர் தான். என்னைப் பொறுத்தவரை துணை முதலமைச்சர் ஆவதற்கு எல்லா தகுதிகளும் வாய்ந்தவர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் அது குறித்து பேசுவதற்கு தமிழிசை யார், குமரி அனந்தன் இல்லையென்றால் அவரை யார் என்றே மக்களுக்குத் தெரியாது.
இளமைப் பருவத்தில் இருந்து இந்த இயக்கத்திற்காக உழைத்தவர் உதயநிதி ஸ்டாலின். பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கைகளில் வளர்ந்த உதயநிதி ஸ்டாலின், வருங்காலங்களில் இளைஞர்களின் வழிகாட்டியாக அமைவார்.” என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசியதாவது, “நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது. அதே போல பாடப்பிரிவுகளுடன் தொழிற் படிப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில் பொறியியல் துறையில் இரண்டு பாடப்பிரிவுகள் மட்டும் தமிழ் வழிக் கல்வியாக இருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து பிரிவுகளிலும் தமிழ்வழிக் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்வழியில் புத்தகங்கள் மாற்றம் செய்வதற்கும் உத்தரவிட்டுள்ளார். உயர்கல்வி, சுகாதாரம் இரு கண்களாக கொண்டு, எண்ணிக்கையை மட்டும் உயர்த்தாமல் தரத்தையும் உயர்த்தும் வகையில் செயலாற்றுபவர் முதலமைச்சர் ஸ்டாலின் எனக் கூறினார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!