Tamilnadu
கருத்துக் கலங்கரை வெளிச்சமாக என்றும் வாழ்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர் ! - கி.வீரமணி அறிக்கை !
முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரின் நினைவை போற்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ,திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கலைஞரை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எண்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரராகவும், பொதுத் தொண்டின் புத்தாக்கப் பெருமானாகவும், பேச்சு, எழுத்து, ஆளுமை, கலைத்துறை, இலக்கியத் துறை, அரசியல் துறையில் அரியதோர் வரலாற்றுச் சாதனையாளரும், நமது கொள்கைக் குடும்பத்தின் பேராசான் தந்தை பெரியாரால் ‘‘மிகவும் முன்யோசனைக்காரரான பகுத்தறிவாளர்'' என்று பல ஆண்டுகளுக்குமுன்பே பாராட்டப் பெற்றவரும், அவர்தம் அரசியல் வழிகாட்டி ஆசான் அறிஞர் அண்ணாவினாலேயே ‘‘நான் விட்ட பாதியை அவர் தொடர்ந்து முடிப்பார்'' என்று சரியாக அறிந்து கொள்ளப்பட்டவருமான முத்தமிழறிஞர் நம் கலைஞர் அவர்களின் 6 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (7.8.2024)!
கலைஞரின் சாதனைகளிலேயே தலையாயது!
திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்து, குவலயமே கொண்டாடிப் பின்பற்றவேண்டிய ஒருவராக, தமது உழைப்பாலும், அறிவு, ஆற்றலாலும் வளர்ந்ததோடு, தான் வளர்த்த இயக்கமும், கொள்கையும் மேலும் செயல்திறன் பெறும் வண்ணம் அதற்குரிய ஓர் ஆளுமை ஆற்றலையும் அடையாளம் காட்டி, பக்குவப்படுத்திய நாற்று செழித்த பயிர் என்பதை அவரும் உலகுக்கு நிரூபித்துக் காட்டும் வகையில், நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓங்கு புகழ் 'திராவிட மாடல்' ஆட்சியின் நாயகனாக ஒளிவீசும் – எதிர்நீச்சல் என்றாலும் சளைக்காதவராக சரித்திரம் படைத்தவராகியுள்ள காட்சி, கலைஞரின் சாதனைகளிலேயே தலையாயது!
ஈரோட்டுக் குருகுலம் இணையற்ற கொள்கை நாற்றுப் பண்ணை என்பது இதன்மூலம் உலகம் உணரும் வரலாறாகி, வாகை சூடி வருகிறது!
சோதனைகள் எல்லாம் சாதனைகளாகின்றன, உரிமைகள் வெற்றி உலா வருகின்றன! களமாடுவதோ அனைவருக்கும் கடமையாகி உள்ளது!
எனவே, நம் கலைஞரின் நினைவு என்பது கொள்கையின் மறு வார்ப்பு, லட்சியப் பயணத்தின் நெடிய பயணத்தின் நிகழ்கால, வருங்கால கட்டங்கள்!
உரிமைக் குரல் கொடுத்து – உறவுக்குக் (அனைவரிடமும்) கைகொடுப்போம்!
என்றும் வாழ்கிறார்;
கருத்துக் கலங்கரை வெளிச்சமாக!
திராவிடத்தின் புகழை திசையெட்டும் முரசொலிப்போம்!
கலைஞர் வாழ்கிறார்; மறையவில்லை – கொள்கை வெற்றியாக என்றும் வாழ்கிறார்!
மக்களின் இதய சிம்மாசனம் என்றும் அவருடையது – நிரந்தரக் குடியிருப்பு!
எனவே, என்றும் வாழ்கிறார்; கருத்துக் கலங்கரை வெளிச்சமாக!
குருகுலத்து மாணவராகிய குவளை மலரின் மணம் என்றும் வீசும்; அகிலம் அதைப் பேசும்!"என்று கூறியுள்ளார்
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!