Tamilnadu
உள் ஒதுக்கீடு விவகாரம் : “சமூக நீதி வரலாற்றில் இது மிக முக்கியமான தீர்ப்பு” - ஜவாஹிருல்லா வரவேற்பு !
தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு வரும் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தமிழ்நாட்டில் கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அருந்ததியினருக்கு 3% உள் இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. இந்த உள் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பட்டியல் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்க தடையில்லை என்றும், உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். 7 நீதிபதிகளில், பேலா திரிவேதி என்ற ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்த நிலையில், மற்ற 6 நீதிபதிகளும் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை இந்த தீர்ப்புக்கு தற்போது அனைவர் மத்தியிலும் வரவேற்பு பெற்று வரும் நிலையில், உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப் பஞ்சாப் அரசு சட்டம் கொண்டு வந்தது. அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 58% உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாகப் பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்தது.
இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 6 நீதிபதிகள் கொண்டகுழு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை. பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப் பஞ்சாப் அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும்.
அரசியல் சாசன சட்டத்தின் 14வது பிரிவை உள்ஒதுக்கீடு மீறவில்லை. பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் பட்டியலின வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். உள் இட ஒதுக்கீடு தொடர்பான மாநில அரசுகள் பிறப்பித்த சட்டம் செல்லும் என்றும் தீர்ப்பை வழங்கி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு 3.5 சதவீதமும் பட்டியல் இனத்திற்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு மூன்று சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை முன்மாதிரியாக வைத்துத் தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பட்டியலின மக்களே சிலர் எதிர்த்து வழக்கு தொடுத்தனர்.
இத்தகையச் சூழலில் பஞ்சாப் மாநிலத்தின்இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் சிறப்பானதொரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகத் தமி ழ்நாட்டில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறைகளை எதிர் கொண்டு வரும் சமூகங்களுக்குச் சம வாய்ப்பை அளிக்க உள் ஒதுக்கீடு வகை செய்கிறது என்பதை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. சமூக நீதி வரலாற்றில் இது மிக முக்கியமான தீர்ப்பாகும்.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !