Tamilnadu
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளம் அருகே உள்ள ஆவியூரில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கே இருக்கும் பாறைகளை உடைப்பதற்காக வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வெடிப் பொருள்கள் கொண்டு வரப்பட்டு அங்குள்ள அறையில் இன்று காலை இறக்கி வைக்கப்பட்டது.
அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அங்கிருந்த வெடி மருந்துகள் வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த வெடி விபத்தில் கல்குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்தனர். இதனிடையே இந்த விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வெடி விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. இந்த பயங்கர வெடிவிபத்தால் அக்கிராமத்தை சுற்றி உள்ள 5 கிலோ மீட்டர் தொலைவு வரை அதிர்வுகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், “விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!