Tamilnadu

"தமிழ்நாட்டின் பலம் பற்றி பாஜகவுக்கு தெரியவில்லை, இது திமுகவின் கோட்டை" - RS பாரதி பேச்சு !

சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி சார்பில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர், ராயபுரம் ஆர் கே நகர், தொகுதி திமுக கழகத்தின் வேட்பாளர் கலாநிதி வீராசாமி அவர்களை ஆதரித்து வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மேற்க்கொள்ளவிருக்கும் தேர்தல் பணிகள் குறித்து

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் வியாசர்பாடி எம் ஆர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், " பிரதமர் மோடி இந்தாண்டு 4 முறை தமிழகம் வந்துள்ளார், இன்னமும் வர இருக்கிறார். அவர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் நமக்கு கவலை இல்லை, மக்களவை தேர்தலை ஏழு கட்டமாக நடத்த உள்ள நிலையில், முதல்கட்டமாக தமிழ்நாட்டில் நடத்த திட்டம் தீட்டியுள்ளனர். ஏனெனில் பாஜக வென்று விடும் என்ற தவறான எண்ணத்தில்,ஆனால் தமிழ்நாட்டின் பலம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை இது திமுகவின் கோட்டை என்று.

கழகத்தின் செயல்வீரர்கள் என்று பெயர் சூட்டியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். கழகத்தின் அனைத்து செயல்களையும் போர் வீரர்களாக தலை நிமிர்ந்து செயல்படுத்துவதில் வல்லவர்கள். ஆகவே செயல்வீரர்கள் என்று கலைஞர் பெயர் சூட்டினார்.தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பின் போது பிரதமர் மோடி ஒரு பைசா கூட தமிழகத்திற்கு தரவில்லை, ஆனால் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தனது நிதியிலிருந்து மக்களை பாதுகாத்தார். வருகின்ற தேர்தலின் மூலம் வடசென்னை சொர்க்கம் போல் மாற உள்ளது. சென்னை பட்டினம் உருவானதே வடசென்னையில் தான்.

அப்படிப்பட்ட வடசென்னையை 4,100 கோடி ரூபாய் மதிப்பில் வட சென்னையை தென் சென்னை போல் மாற்றியவர் நமது கழகத் தலைவர் அவர்கள். நமது கட்சிக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், அனைத்தையும் மறந்து விட்டு தேர்தலுக்காக ஒன்றாய் பாடுபட வேண்டும். நம் வெற்றியை கழக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். வருகிற தேர்தலை எதிர்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களால் 2019-ல் அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி தற்போது வரை நிலையாக உள்ளது. மக்களை காப்பாற்ற இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்" என்று கூறினார்.

Also Read: உ.பி ஹோலி பண்டிகை : இஸ்லாமியர்கள் மீது தண்ணீர் ஊற்றி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கம் எழுப்பிய சிறார்கள் !