Tamilnadu

தஞ்சை மக்களின் நெஞ்சை அள்ளிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்!

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள். இன்று காலை தஞ்சை மாநகரில் மக்களைச் சந்தித்து தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலி அவர்களுக்காக வாக்குச் சேகரித்தார்கள்.

காலையில் தஞ்சை சத்யா விளையாட்டுத் திடலில் நடைபயிற்சி மேற்கொண்ட கழகத் தலைவர் அவர்கள் அங்கே பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த மக்களையும், மாணவர்களையும், சந்தித்தார். தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை அங்கு கண்ட மக்கள், அவரைக் கண்டு மகிழ்ச்சி கொண்டனர். அவருடன் உரையாடும் பொழுது தாங்கள் மகளிருக்கு அளிக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எங்களுடைய குடும்பச் செலவு முதல்கொண்டு அவசரச் செலவுக்குப் பயன்படுகிறது. மிக்க மகிழ்ச்சி என்றனர்.

கல்லூரி மாணவ, மாணவிகள் கழகத் தலைவர் அவர்களிடம் புதுமைப்பெண் திட்டத்தில் தங்களுக்கு மாதம் 1,.000 ரூபாய் அளிப்பது, எங்களுக்குத் தன்னம்பிக்கை உணர்வை அளிக்கிறது என்றும், இனி, கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அறிவித்துள்ளது எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் கூறி நன்றி தெரிவித்தனர்.

சத்யா விளையாட்டுத் திடலில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது, அங்குப் பயிற்சி மேற்கொண்டிருந்த இளைஞர்கள், மாணவ, மாணவியர், மகளிர் ஆண்கள் எல்லோரும் திரண்டுவந்து மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன், தலைவர் அவர்களுடன் கை குலுக்கிக் கொண்டும், செல்பி எடுத்தும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அப்போது அவர்களிடம் தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் திரு.முரசொலி அவர்களை அறிமுகப்படுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்கள். அதைக்கேட்டு பொதுமக்களும் மகிழ்ச்சியோடு நிச்சயம் நாங்கள் வாக்களிப்போம் என்று உறுதி கூறினர்.

அதனைத் தொடர்ந்து, தஞ்சை நகர் காய்கறிச் சந்தைக்கு நடந்து சென்று காய்கறிக் கடைகளில் காய்களைக் கையில் எடுத்தபடியே விலை நிலவரம் கேட்டறிந்தார். காய்கறி விற்பனையாளர்கள் கழகத் தலைவர் அவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் நன்றாக விற்பனையாகிறது. உங்கள் ஆட்சியில் நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறோம். நிச்சயமாகக் கழக வேட்பாளர் முரசொலிக்கு நாங்கள் வாக்களிப்போம், அவரை வெற்றிபெறச்செய்வோம் என்று உறுதி அளித்தனர்.

சில காய்கறிக் கடைக்காரர்கள், செவ்வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களைக் கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு மகிழ்ச்சியோடு வழங்கினார்கள். அவற்றைப் பெற்றுக் கொண்ட தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். சந்தைப் பகுதியை கடந்து சென்ற கழகத் தலைவர் அவர்கள் தேநீர் கடைக்குச் சென்று அங்குத் தேநீர் பருகி அங்கிருந்தவர்களிடமும் உரையாடி கழக வேட்பாளரை அறிமுகப்படுத்தி வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் உறுதியாக உதயசூரியனுக்கு வாக்களிப்போம், முரசொலி அவர்களை வெற்றிபெறச் செய்வோம். உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் என்று கூறி மகிழ்ந்தார்கள்.

கழகத் தலைவர் தளபதி சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு, மகிழ்ந்து தலைவர் அவர்களுக்கு உற்சாகம் அளித்த காட்சிகளைக் கண்டபோது ஒரு சிந்தனை எண்ணத்தில் உதித்தது.

சில நாள்களுக்கு முன், கோவை மாநகருக்கு பா.ஜ.கட்சி தலைவர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வந்தபோது, பள்ளி மாணவர்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளை மீறி, பள்ளி மாணவ மாணவிகளை எல்லாம் பல மணி நேரம் நிற்கவைத்து “ரோடு ஷோ” என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தி, மக்களை ஏமாற்றும் வழியில் செயல்பட்டனர் பா.ஜ.க. கட்சியினர்.

அவர்களைப் போல் இல்லாமல், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் மக்களோடு மக்களாகப் பழகி, விளையாட்டுத் திடலுக்கும், மக்கள் வியாபாரம் செய்யும் இடங்களுக்கும் சென்று அவர்களைச் சந்தித்து, அவர்களை மகிழச் செய்து, அவர்களிடம் வாக்குச் சேகரித்த காட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மக்கள் இயக்கம், அது மக்களால் வளர்க்கப்பட்ட இயக்கம், மக்கள் வெற்றி தேடித் தரும் இயக்கம் எண்ணும் வரலாற்றை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளன.

கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்த விவசாயச் சங்கத்தினர்

திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் விவசாய விளை பொருள்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவுகளுடன் 50 சதவிகிதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு 16 விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கழகத் தலைவர் தளபதி அவர்களைச் சந்தித்து மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்.

விவசாயிகள் சந்தித்த இந்த நிகழ்ச்சி நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் பெறவிருக்கும் வெற்றிக்கு முன்னதாகவே கட்டியம் கூறுவது போல் அமைந்திருந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின்ஆதரவைப் பெற்றுவரும் கழகத் தலைவரின் இரண்டாம் நாள் பயணம் இப்படித் தொடங்கியது. என்றும் எப்போதும் பொதுமக்கள் தங்கள் ஆதரவைக் கழகத் தலைவர் அவர்களுக்கு வழங்குவார்கள். உதயசூரியனுக்கும், கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கும் வழங்குவார்‘ என்பதை இந்தக் காட்சிகள் உறுதிபடுத்திக் கொண்டுள்ளன.

Also Read: TM கிருஷ்ணா விவகாரம் : பெரியார் குறித்த பேச்சு - “இசையில் அரசியலை கலக்க வேண்டாம்” - முதலமைச்சர் கருத்து!