Tamilnadu

பிரதமர் மோடி பேரணியில் பள்ளி மாணவர்கள் : பா.ஜ.கவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் - வழக்கு பதிவு!

கோவையில் திங்கட்கிழமை மாலை பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ஸ்ரீ சாய்பாபா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சீருடையில் பங்கேற்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாப் சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் , குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று பள்ளியில் விசாரணை நடத்தினர். பள்ளியில் நேரடியாக சென்று விசாரணை நடத்திய பள்ளி கல்வி துறை அதிகாரிகள் இது குறித்த அறிக்கையினை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார்பாடியிடம் வழங்கினர்.

மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் பள்ளியில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், இது தொடர்பாக சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகத்தின் மீது சிறார் சட்டப்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக கோவை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது.

Also Read: ”ஹிட்லர் வரலாறு படித்தால் அதில் தெரிவது மோடி முகம்” : இரா.முத்தரசன் கடும் சாடல்!