Tamilnadu

"அமலாக்கத் துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது" - உயர்நீதிமன்றம் கருத்து !

திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தனது சொத்துக்குவிப்பு வழக்கை முடித்துத் தருவதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் ரூ.51 கோடி வரை பேரம் பேசி தர வேண்டும் என்றும் மிரட்டியதாகவும் குறிப்பிட்டார்.

மருத்துவர் புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து லஞ்சப்பணத்தை வாங்க வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அமலாக்கத்துறை அதிகாரி பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் பெற்றது தெரியவந்தது.

மேலும், அதனை சக அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன. மேலும் இதில் மதுரை, சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தற்போதுவரை அவர் நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில், அங்கித் திவாரி உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் ஒரே நேரத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

அவர் மனு இன்று சென்னை உய்ரநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், "சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டிய அமலாக்கத் துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது. அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது" என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும், "விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் லஞ்சம் பெறும் குற்றச்சாட்டுகளில் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் " என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் அங்கித் திவாரி தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் உச்ச நீதிமன்றத்திலேயே நிவாரணம் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறி அங்கித் திவாரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Also Read: புல்வாமா தாக்குதல் நடந்த ஒரே வாரம் : பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்ற பாஜக... பின்னணி என்ன ?