Tamilnadu

ஒரே நாளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,07,632 பேர் பயணம் - போக்குவரத்து துறை அறிவிப்பு !

நேற்று இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு 01.00 அளவில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் திடீரென அதிகரித்த காரணத்தினால் பேருந்து இயங்குவதில் சில சிரமங்கள் ஏற்பட்டது. எனினும் போக்குவரத்து கழகங்களின் சிறப்பான செயல்பாடு காரணமாக, பயணிகள் அவர்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து போக்குவரத்து கழகங்களின் சார்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. "10.02.2024 அன்று அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் சார்பாக 350 பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் சார்பாக 201 பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழகம், சேலம் சார்பாக 15 பேருந்துகளும், மேலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக திருவண்ணாமலைக்கு 23 பேருந்துகள் இயக்கப்பட்டன ஆக மொத்தம் தினசரி இயக்கக்கூடிய 1,124 பேருந்துகளுடன், 612( திருவண்ணாமலைக்கு 150 பேருந்துகள்) சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படுகின்ற பேருந்துகளை விட நேற்றைய தினம் அதிக அளவில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட காரணத்தினால் வழக்கம் போல (வார இறுதி நாட்களில்) அதி காலை 3.30 மணியளவில் பயணிகள் அனைவர்களும் முழுமையாக அவர்தம் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும் இப்பேருந்துகள் இயக்கத்தின் வாயிலாக, நேற்றைய தினம் (10.02.2024) மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,07,632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.அரசு போக்குவரத்து கழக அலுவலர்களும், காவல்துறையினரும் அதிகாலை வரை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து இயக்கத்தினை சரி செய்தனர்"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: AFC ஆசிய கோப்பை கால்பந்து : தொடர்ந்து இரண்டாம் முறையாக கோப்பையை வென்றது கத்தார்.. இந்தியாவின் நிலை என்ன ?