Tamilnadu

”தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உதவாத பா.ஜ.க அரசு” : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!

கடலில் மீன் பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மீனவர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "கடலில் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒன்றிய அரசு எந்த ஒரு இழப்பீடும் வழங்கவில்லை.

ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணாமல் போன 205 மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 245 படகுகளை இலங்கை கடற்படையால் பிடித்துள்ளது. இதை மீட்டு ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் முதல் ஒன்றிய அமைச்சர்கள் வரை அனைவரும் நமது மீனவர்களின் நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருந்து வருகிறது " என தெரிவித்துள்ளார்.

Also Read: ”சிறையில் அடைத்தாலும் பா.ஜ.கவில் சேரமாட்டேன்” : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!