Tamilnadu
”காந்தியாரைக் கொன்ற மதவாத அரசியல் சக்திகளை வீழ்த்துவோம்” : ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை!
காந்தியார் படுகொலை செய்யப்பட்ட இந்நாளில் - மக்கள் செய்யவேண்டியது மலர்வளையம் வைப்பதல்ல - காந்தியாரைக் கொலை செய்த மதவாத ஆதிக்க சக்திகளை - மதவாத அரசியலை வரும் தேர்தலில் வீழ்த்துவதே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இன்று (30-1.2024) ‘தேசப்பிதா’ என்று இந்திய மக்களால் பெரிதும் அழைத்து, மதிக்கப்பட்ட அண்ணல் காந்தியார் படுகொலை செய்யப்பட்ட கொடூரமான மதவெறி கோரத்தாண்டவம் ஆடிய நாள்!
இந்தியா ‘‘சுதந்திரம்‘’ பெற்றது 15-8-1947 இல்! அதுவும் ஜோதிடர் குறித்த ‘‘நல்ல நேரமான’’ ஆகஸ்ட் 14 ஆம் தேதி, நள்ளிரவில், நடுநிசியில் வந்த சுதந்திரம்! ‘தேசத்தந்தை’ அண்ணல் காந்தியார், கோட்சே என்ற மதவெறிப் பார்ப்பனரால் கொல்லப்பட்டது 30-1-1948 இல் - அதாவது ‘‘சுதந்திரம்‘’ பெற்ற 165 ஆம் நாளில்! அதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று, காந்தியார், ‘‘நம் நாடு மதச்சார்பற்றது’’ என்று சொன்ன 53 ஆம் நாள் கொல்லப்பட்டார் - மதவெறியர்களால்! காந்தியாரைக் கொன்ற கோட்சே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவன்.
காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில் கலவரங்களைத் தடுத்து அமைதி காக்கச் செய்தவர் தந்தை பெரியார்!
‘காந்தியாரைச் சுட்டுக்கொன்றவன் ஒரு முஸ்லிம்‘ என்ற தவறான பொய்யான பரப்புரையை தமிழ்நாட்டில் பரப்பியதன் விளைவாக, திருவண்ணாமலை, வாணியம்பாடி, ஈரோடு போன்ற பல ஊர்களில் இஸ்லாமியர்கள் குறி வைக்கப்பட்டு, மதக் கலவரம் ஏற்படும் அபாய நிலையில், அன்றைய முதலமைச்சர் ஓமாந்தூர் இராமசாமியார் அவர்களின் விருப்பத்திற்கேற்ப, தந்தை பெரியாரை, திருச்சி வானொலி பேட்டி கண்டு வெளியிட்ட செய்தி - மதக் கலவரங்களைத் தடுத்து நிறுத்தியது; மனிதநேயமும், அமைதியும் திகழ்ந்த பூமியாயிற்றே தமிழ்நாடு!
காந்தியாரை, அவரது வருணாசிரம ஆதரவு நிலைக்காக கடுமையாகக் கண்டித்து சமூகநீதி காக்க காங்கிரசை விட்டு (1925 இல்) வெளியேறியவர் தந்தை பெரியார்! காங்கிரசிலிருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியாரை, காந்தியார் அழைத்து, பெங்களூரில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்... இல்லை, இல்லை வாதாடினார்! அச்சந்திப்புப் பதிவான ஆவணங்களாகி, ஏடுகளில் உள்ளது!
உரையாடலின் இறுதியில், ‘‘நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; ஹிந்து மதத்தைச் சார்ந்த மதவெறியர்கள் உங்களையே உயிருடன் விட்டு வைக்கமாட்டார்கள்’’ என்று முன்னோட்டமான ‘‘தீர்க்க தரிசனமாகவே’’ சொன்னார், தந்தை பெரியார்! ஆம்! 120 வயது வரை வாழ்ந்து மக்களுக்குத் தொண்டாற்ற விருப்பமுள்ள காந்தியாரை, மதவெறி, ஜாதிவெறி உயிர் பறித்து, 80 ஆம் வயதிலேயே பலி வாங்கிவிட்டது!
மகாராட்டிரத்தில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டதுண்டே!
அந்தச் சூழ்நிலையில்கூட, மகாராட்டிராவில் காந்தியாரைக் கொன்ற கோட்சே, பார்ப்பனர் என்ற செய்தி பரவியவுடன், சத்தாரா, நாசிக் போன்ற இடங்களில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர்; அக்கிரகாரங்கள் சூறையாடப்பட்டன. (ஆதாரம்: அன்றைய மகாராட்டிர உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் எழுதியுள்ள சுயசரிதை தகவல்).
தந்தை பெரியார், தமிழ்நாட்டில் மதக் கலவரமோ, பார்ப்பனர்களுக்கு ஆபத்தோ, எதிரான வன்முறையோ கிளம்பிவிடாமலிருக்க பல ஊர்களில் மக்களிடையே பரப்புரை நிகழ்த்தினார். (ஆதாரம்: நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூர் (பொதுக்கூட்டம் வரை - ‘‘புதியதோர் உலகம் செய்வோம்‘’ என்ற தலைப்பில் வந்த வெளியீடு).
தனது இயக்க இளம் பேச்சாளரை (கலைஞர்) கூடக் கண்டித்து, அமைதிக்குக் குந்தகம் ஏற்படாது தடுத்த மகத்தான மனிதநேயர் தந்தை பெரியார்!
இன அழிப்புக்காரர்களாக இருந்தவர்களை அழிப்பதற்காக, அச்சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. காரணம், அவர் மானுட நேயர் - தனி மனித வெறுப்பு அல்ல அவரது கொள்கை!
‘வாழ்ந்த காந்தியார் வேறு; மறைந்த காந்தியார் வேறு!’’
பிற்போக்குத் தத்துவங்களின் எதிரி அவர் என்பதைக் காட்டிதான், தக்க நேரத்தில் இஸ்லாமியர்களையும், பார்ப்பனர்களையும் வெடிக்கவிருந்த கலவர வன்முறைகளிலிருந்து பாதுகாத்தார்!
காந்தியாரை அவரது வருணாசிரம பிற்போக்கு - பார்ப்பன ஆதரவுக்காகக் கண்டித்த தந்தை பெரியார், அவர் மறைவின்போது - ‘‘காந்தி நாடு’’, ‘‘காந்தி மதம்‘’ என்றெல்லாம் பெயரிடச் சொன்னார். தனது நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்திற்கான தக்க காரணமும் சொன்னார், இரண்டே வரிகளில்!
‘‘வாழ்ந்த காந்தியார் வேறு;மறைந்த காந்தியார் வேறு!’’ (1948, ‘குடிஅரசு’) கடைசி காலத்தில் காந்தியார் கூறியது என்ன?
தேசத் தந்தையைக் கொன்றதைவிடக் கொடூரம், மதச்சார்பற்ற நாடாகத் திகழவேண்டும் என்ற அவரது தத்துவத்தையும், அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பீடிகை இடம்பெற்றபோதிலும், அதனைத் தலைகீழாக மாற்றி, பச்சையான ஒரு ‘‘ஹிந்துராஷ்டிரமாக’’ ஆக்கி வருகின்றனர் என்ற வேதனையும், வெட்கமும் வெளிச்சம் போட்டுக் காட்டும் விபரீத நிலை இன்று!
அயோத்தியில் அரசு இயந்திரம் மூலமே இராமன் கோவில் கட்டப்பட்டுள்ளது!
அது அரைகுறையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையிலே - தேர்தலில் வாக்கு வங்கி, அறுவடைக்காக இராமன் ‘‘பிரான் பிரதிஷ்டை’யை பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் செய்தனர் - ஹிந்து மதத்தின் நான்கு சங்கராச்சாரியார்களின் ‘சாபக் கணைகள்’ ஊடுருவிய நிலையிலும்!
‘‘இதிகாச இராமன் வேறு நான் வணங்கும் இராமன் வேறு’’ என்று பகிரங்கமாகக் கூறியவர் காந்தியார் அவர்கள்!
மதவெறியை மாய்த்து, மனிதநேயத்தையும் மனித குல சமத்துவத்தையும் மலர்வளையங்கள் முக்கியமல்ல - மதவெறியை வீழ்த்துவதே காந்தியாருக்குச் செய்யும் மரியாதை!
ஏற்படுத்த காந்தியார் நினைவு நாளில் சூளுரைத்து, ஜனநாயகம் காக்க, மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வீறுகொள்வதே அண்ணல் காந்தியாருக்குத் தரும் உண்மை மரியாதை!
மலர்வளையங்கள் முக்கியமல்ல - இதய மலர்களைக் குத்திக் கிழிக்கும் மதவெறி திரிசூலங்களைக் கீழே போட வைக்க புதியதோர் ஆட்சி வருகிற பொதுத்தேர்தலில் உருவாக ‘‘ஓட்டப்பர்களான’’ மக்கள் உறுதி ஏற்பார்களாக!
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!