Tamilnadu

உயர்கல்வி பணியிடங்களில் இட ஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டுவதா? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு CPM கண்டனம்!

நாட்டின் கோடிக்கணக்கான எஸ்.சி/எஸ்.டி/ ஓபிசி இளைஞர்/இளம் பெண்களின் சமூக பாதுகாப்பான வேலை உரிமையை பறித்து, சாதி அநீதியை நிலைநாட்ட முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் போக்கு வன்மையான கண்டனத்திற்குறியது என சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

ஒன்றிய அரசின் உயர் கல்வி‌ நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமலாக வேண்டும் என ஆண்டாண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால், ஒன்றிய அரசின் உதவிபெறும் உயர்கல்வி நிலையங்களில் அனைத்திலும் எஸ்.சி/எஸ்.டி/ ஓபிசி இட ஒதுக்கீட்டுகளுக்குமொத்தமாக முடிவுகட்டும் விதமான வரைவினை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது. இது கடுமையான கண்டனத்திற்குரியது.

எஸ்.சி/எஸ்.டி/ ஓபிசி இட ஒதுக்கீட்டு காலியிடங்களை அதே பிரிவினரை கொண்டு நிறப்ப சிறப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பல ஆண்டுகளால வாதிட்டு வருகிறோம். ஆனால், சில ஆண்டுகள் முன் ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டும்‌ ஒரு பரிந்துறை அரசிற்கு தரப்பட்டது. அப்போது சி.பி.ஐ.எம் அதனை நிராகரிக்க வேண்டுமென வற்புருத்தியது. ஆனால் விஷமத்தனமாக அமைதிகாத்த பாஜக அரசு, நேரம் பார்த்து புதிய தாக்குதலை தொடுத்திருக்கிறது. இந்த வரைவின் மீது கருத்துக் கோருவதே தவறானது, முற்றாக திரும்பப்பெற்றிட வேண்டும்.

எஸ்.சி/எஸ்.டி/ ஓபிசி இட ஒதுக்கீடு நடப்பில் இருக்கும்போதே மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சாதி ஆதிக்க போக்கு வெளிப்படுவதை பார்க்கிறோம்‌. இப்போது உள்ள இடஒதுக்கீடும் பறிக்கப்பட்டால் கல்வி நிறுவனங்கள் சிதைந்து சமூக நீதி கெடுக்கப்படும். மேலும் இந்த தாக்குதல் பிற துறைகளிலும் முன்னெடுக்க உதாரணம் உருவாகும்‌.

நாட்டின் கோடிக்கணக்கான எஸ்.சி/எஸ்.டி/ ஓபிசி இளைஞர்/இளம் பெண்களின் சமூக பாதுகாப்பான வேலை உரிமையை பறித்து, சாதி அநீதியை நிலைநாட்ட முயற்சிக்கும் பாஜகவின் இந்த போக்கு வன்மையான கண்டனத்திற்குரியதாகும். எதிர்ப்புகளை தொடர்ந்து கல்வி அமைச்சகம் கொடுத்திருக்கும் விளக்கம் போதுமானதல்ல. பல்கலை கழக மாநியக் குழுவிம் இந்த முயற்சியே மொத்தமாக ரத்து செய்யப்பட்டு வரைவு திரும்பப் பெறப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு உரிமைப்படி காலிப் பணியிடங்களை உடன் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என சி.பி.ஐ.எம் சார்பில் வலியுறுத்துகிறோம்.

Also Read: எய்ம்ஸ் என்றால் ‘ஏமாற்றுதல்’ : ஒன்றிய அரசை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!