Tamilnadu

”பேரிடரின்போது மக்களை காப்பாற்ற முன்வந்த மீனவர்களை கடவுளாக பார்க்கிறேன்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

மிக்ஜாம் புயல் பாதிப்பின் போது அரசுடன் இணைந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட 1200 மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மீனவர்களை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "புயல் - மழை - வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தாலும், மக்களை காக்க முதலில் களத்திற்கு வருபவர்கள் நம் மீனவ நண்பர்கள். சமீபத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தூத்துக்குடி - நெல்லை போன்ற தென் மாவட்டங்களிலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, உயிரைப் பணயம் வைத்து மீனவ நண்பர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டார்கள்.

மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் உடைந்தபோதுகூட இதுபற்றி கவலைப்படாமல் மக்களை காப்பாற்றி இருக்கிறார்கள்.மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களைக் கொண்டு சேர்த்தவர்கள் இவர்கள்தான். மீனவர்கள் நலனில் அக்கறை உள்ள அரசு தி.மு.க என்று பல்வேறு மீனவர்கள் நலத் திட்டங்களைத் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

எனக்கு இறை நம்பிக்கை கிடையாது. ஒருவரின் உயிரை யார் ஒருவர் காப்பாற்றுகிறாறோ அவர்தான் கடவுள் என நான் நினைக்கிறேன்.இங்குள்ள ஒவ்வொருவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன். நேர்மையும் - துணிச்சலும் - கேட்காமலேயே பிறருக்கு உதவி செய்கின்ற பண்பையும் கொண்டுள்ள நம் மீனவர்களுக்குக் கழக அரசு என்றும் துணை நிற்கும் " என தெரிவித்துள்ளார்.

Also Read: காந்தியின் விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த சபாநாயகர் அப்பாவு!