Tamilnadu

”கனவு நனவாகிய தருணம் இது”: கேலோ இந்தியா தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023ஐ, சென்னையில் நடத்திட முடிவு மேற்கொண்டதைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்கள்.

இந்நிலையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா இன்று சென்னையில் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

மேலும் ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர், நிசித் பிரமாணிக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று உரையாற்றினார். அப்போது, "கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு நடத்த வேண்டும் என்ற கனவு நனவாகிய தருணம் இது. கல்வி, மருத்துவம் மட்டுமல்ல விளையாட்டு துறையிலும் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது

தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதலே பல சர்வதேச போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டி இருக்கிறோம். உலகமே பாராட்டும் அளவிற்கு ௪௪வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை திராவிட மாடல் அரசு நடத்தியது.

தமிழ்நாடு அரசு நடத்திய முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் 3.5 லட்சம் வீரர்கள் பங்கேற்றனர். தடகள வீரர்களுக்கு பயிற்சி அளிக்க 76 புதிய பயிற்சியாளர்களைத் தேர்வு செய்துள்ளோம். விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட ஊக்கம் அளித்து வரும் முதலமைச்சருக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

Also Read: ரூ.621 கோடியில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை : 5 முக்கிய அம்சங்கள் என்ன?