Tamilnadu

மற்றொரு முறைகேட்டு புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர்: நடவடிக்கை கோரி எழுந்த புகார்!

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், தனியார் நிறுவனமான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் (PUTER Park) நிறுவனங்கள் மூலம் பயிற்சி கல்வி பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாகப் பல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகார் எழுந்தது.அதன்பேரில், பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த டிசம்பர் 26ந் தேதி கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே பூட்டர் பவுண்டேஷன் செயல்பாடு மற்றும் அதில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பாக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு ஆதரவாளர்களான பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி, துணை பேராசிரியர்கள் நரேஷ் குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் நிலையம் வரவழைத்து காவல் உதவி ஆணையர் நிலவழகன் அண்மையில் விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள பல்கலைகழக பதிவாளர் தங்கவேல் தலைமறைவாக உள்ளார்.

இந்த முறைகேடு தொடர்பாக போலிஸார் விசாரணை மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தில் சோதனையிலும் நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முறைகேடு வழக்கில் செய்து செய்யப்பட்டுள்ள துணை வேந்தர் ஜெகநாதன் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தரை தனி அறையில் சந்தித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மற்றொரு முறைகேட்டு புகாரில் சிக்கியுள்ளார். பல்கலைக்கழக பதிவாளராக செயல்பட்டு வந்த தங்கவேல் பணியில் இருந்துகொண்டே அப்டெக்கான் ஃபோரம் என்ற தனியார் நிறுவனத்திலும் இயக்குநராக இருந்துள்ளார்.

விதிப்படி அரசு சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் மற்றொரு ஆதாயம் தரும் பதவியில் இருக்ககூடாது என சட்டம் உள்ள நிலையில், அதனை மீறி தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தது விதிமீறலாகும். இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.