Tamilnadu

“இசைக்கு உள்ள குணங்கள் அனைத்தையும் கலைஞரிடம் பார்க்க முடியும்” : நெகிழ்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி !

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் – கலைஞர் குழு சார்பில் `இசையாய் கலைஞர்’என்ற நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு பேசியதாவது:

“கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, ‘கலைஞர் – கலைஞர்’ விழாக் குழுவின் சார்பில், நடைபெறுகின்ற ‘இசையாய் கலைஞர்’ நிகழ்ச்சியில் வரவேற்புரை வழங்குவதில் ‘கலைஞர் – கலைஞர் குழு’வின் தலைவர் என்கிற வகையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கழக அரசு ஒரு புறமும் – தி.மு.கழகம் இன்னொருபுறமும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு ஓராண்டு முழுவதும் மக்களுக்கு பயனுள்ள வகையில் நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கட்டளையின்படி கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஏராளமான மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கின்றோம்.

முக்கியமாக, அரசு சார்பில், 250 கோடி ரூபாய் செலவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல, 250 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக கலைஞர் நூற்றாண்டில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ எனும் மகத்தான திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மையில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்’ என்றே பெயரிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்ல, இதழாளர் கலைஞர், எழுத்தாளர் கலைஞர், கலைஞர் கலைஞர், சமூகநீதிக் காவலர் கலைஞர், பண்பாட்டுப் பாசறை கலைஞர், ஏழைப்பங்காளர் கலைஞர், சட்டமன்ற நாயகர் கலைஞர், பகுத்தறிவு சீர்திருத்தச் செம்மல் கலைஞர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர், நிறுவனங்களின் நாயகர் கலைஞர், தொலைநோக்குச் சிந்தனையாளர் கலைஞர், தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைஞர் என 10-க்கும் மேற்பட்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்த குழுக்களின் சார்பில், ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல, தி.மு.கழகத்தின் சார்பில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளை நடத்த நம் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். எங்களுடைய இளைஞர் அணிக்கு, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்ற தொகுதிக்கு ஒன்று எனும் விதத்தில் கலைஞர் பெயரில் கலைஞர் நூலகம் அமைத்தல் – கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டிகள் – கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டிகளை நடத்துமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.

நாங்கள் ஏற்கனவே இந்த மூன்று மாதங்களில், இளைஞர் அணி சார்பில், 15 கலைஞர் நூலகங்களை தமிழ்நாட்டில் உள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளில் திறந்திருக்கிறோம். அதற்கு இளைஞர் அணி தம்பிமார்களுக்கு இந்த நேரத்தில் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய ஒன்றியத்திலேயே வேறு யாருக்கும் இல்லாத வகையில், கலைஞர் அவர்களுக்கு ஏராளமான முகங்கள் உண்டு. பத்திரிகையாளர் – எழுத்தாளர் – அரசியல் மேதை – திரைக்கதை வசனகர்த்தா என ஏராளமான முகங்கள் உண்டு.

அதில் மிக முக்கியமான ஒரு முகம்தான், அவருக்கு இசை மீது உள்ள ஆர்வம். இசை மீதும் – இசைக் கலைஞர்கள் மீதும் கலைஞர் அவர்களுக்கு தனிப்பிரியம் உண்டு. எனவேதான் ‘இசையாய் கலைஞர்’ என்ற இந்த நிகழ்ச்சியை நடத்துவது என்று எங்களின் கலைஞர் – கலைஞர் குழு சார்பில் முடிவெடுத்து சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறோம்.

மனித உணர்வுகளில் இயல்பாய் கலந்திருப்பது கலை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனையும் அறியாமல் ஒரு கலையுணர்வு இருக்கும் என்று சொல்வார்கள்.

அதே மாதிரிதான், தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொரு தமிழனின் நினைவிலும் நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கண்டிப்பாக நிறைந்திருப்பார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிற தலைப்பு என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. 'இசையாய் கலைஞர்' என்பது மிகமிக பொருத்தமான தலைப்பு.

அதேபோல, இயக்குநர் சகோதரர் கரு.பழனியப்பன் அவர்கள் இன்றைக்கு சிறப்புரை வழங்கவுள்ளார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தனது 20-ஆவது வயதில் முதல் நாடகத்தை எழுதினார்கள். அந்த நாடகத்தின் பெயர் `பழனியப்பன்’ அன்றைக்கு கலைஞர் அவர்களின் பழனியப்பனுக்கு என்ன வரவேற்பு இருந்ததோ அதே வரவேற்பு இங்கிருக்கும் நம் இயக்குநர் பழனியப்பனுக்கும் கிடைத்து வருகிறது. சகோதரர் அவர்கள் பல மேடைகளில் பலமுறை கலந்து கொண்டு உரை நிகழ்த்திவருகிறார்கள். அவர் இன்னும் கறுப்பு சிவப்பு வேட்டி மட்டும்தான் கட்டவில்லை.

எனக்கு இதற்கு முன்பெல்லாம் புத்தகம் படிக்கும் பழக்கமில்லை. இதைச் சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. கோவிட் காலத்தில் எல்லோரும் வீட்டில் அடங்கி இருந்தோம். அப்போதுதான் புத்தகங்கள் அதிகம் வாசித்தேன். இயக்குநர் கரு பழனியப்பன் நிறைய புத்தகங்கள் தந்து வாசிக்கச் சொல்வார்.

கலைஞர் அவர்களை மேடைகளில் நிருபராக பார்த்த பழனியப்பன் அவர்கள், பலமுறை அதை மேடையில் சொல்லி இருக்கிறார். மதுரையில் ஒரு மாநாட்டில் ஒரு பத்திரிகையாளராக செய்தியாளாராக நெருங்கிப் பழகியதைச் சொல்லி இருக்கிறார். இன்றைக்கு கலைஞரின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்து வருகிறார்.

முக்கியமாக கழக இளைஞர் அணி முன்னெடுக்கும் பணிகளில் தொடர்ந்து கைகோர்த்து செயல்பட்டு வருகிறார். ‘பொய்ப்பெட்டி’ நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ‘கலைஞர் நடமாடும் நூலக’த்தை திறந்து வைத்த போது, நம்முடன் இணைந்து அந்த நிகழ்வில் பங்கேற்றார். சகோதரர் கரு.பழனியப்பன் அவர்களை இந்த நிகழ்வுக்கு வருக வருகவென வரவேற்கிறேன்.

அதேபோல கவிஞர் யுகபாரதி அவர்களும் இங்கு சிறப்புரையாற்ற உள்ளார்கள். கலைஞர் அவர்களின் 90 ஆவது பிறந்த நாளின் போது, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் ஏற்பாட்டில் 90 கவிஞர்கள் கலைஞர் அவர்களை சந்தித்து வாழ்த்தினார்கள். அப்போது, யுகபாரதி அவர்கள் அவர் எழுதிய `நேற்றைய காற்று’புத்தகத்தை கலைஞர் அவர்களுக்கு பரிசாக கொடுத்தார்கள்.

அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்ட கலைஞர் அவர்கள், இது என்ன புத்தகம் என்று கேட்கிறார். பாடலாசிரியர்களை பற்றிய புத்தகம் என்று யுகபாரதி சொல்கிறார்.

உடனே, ‘இதில் நானிருக்கிறேனா’ என்று கலைஞர் அவர்கள் கேட்கிறார். ‘நீங்க இல்லாமலா?’ என்று பதில் சொல்கிறார் யுகபாரதி. இதை யுகபாரதி அவர்கள் பல இடங்களில் நினைவுபடுத்தி இருக்கிறார். ‘அவர் இல்லாத புத்தகத்தை அவரிடம் சென்று கொடுக்க முடியுமா?’ என்றும் கேட்கிறார்.

அரசியல் வித்தகர் கலைஞர் - எழுத்தாளர் கலைஞர் – பத்திரிகையாளர் கலைஞர் – வசனகர்த்தா கலைஞர் – முதல்வர் கலைஞர் என கலைஞரின் பல முகங்களை பற்றி பல புத்தகங்கள் வந்திருக்கின்றன.

ஆனால் ஒரு, பாடலாசிரியர் கலைஞரைப் பற்றி ‘நேற்றைய காற்று’ புத்தகத்தில் இடம்பெறச் செய்தவர் சகோதரர் யுகபாரதி. எனக்கும் அவர் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறார். நான் பாடவில்லை அவரின் பாடலுக்கு வாயசைத்து இருக்கிறேன். நிறைய ஹிட் பாடல்களை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன்.

இசையாய் கலைஞர்! - இசைக்கு என்னென்ன குணங்கள் இருக்கிறதோ, அந்த குணங்கள் அனைத்தையும் கலைஞர் அவர்களிடமும் நம்மால் பார்க்க முடியும். மனிதனின் உணர்வுகளோடு உரையாடும் வல்லமை இசைக்கு உண்டு. அந்த ஆற்றல் கலைஞர் அவர்களின் இலக்கியத்துக்கு உண்டு.

ஒரு மனிதனை உணர்ச்சிப் பெருக்கால் வெகுண்டெழச் செய்யும் வல்லமை இசைக்கு உண்டு. அந்த ஆற்றல் கலைஞர் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும் உண்டு. ஒடுக்கப்பட்ட மக்கள், உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கள்படும் துயரை இசையின் மூலமாகவே வெளிப்படுத்தினார்கள். அவர்களின் துயரைப் போக்க தனது பேனாவால் போரிட்டவர் கலைஞர் அவர்கள்.

காயம்பட்ட மனதை இசை ஆற்றும். அதுபோல், சமுதாய இழிவால் காயம்பட்டிருந்த மக்களுக்கு தனது எழுத்தாலும் - அரசியலாலும் மருந்துப் போட்டவர் கலைஞர் அவர்கள். மகிழ்ச்சியில் உங்களை இசை துள்ள வைக்கும். கலைஞர் அவர்களின் முகம் பார்த்தாலே நம் உடன்பிறப்புகள் துள்ளி குதிப்பார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப இசை பரிணாம வளர்ச்சியும், மாற்றமும் அடையும். அதேபோல், கையெழுத்துப் பிரதியாக முரசொலியைத் தொடங்கி, ட்விட்டர் காலம் வரை மாற்றத்தை உள்வாங்கி வளர்ந்தவர் கலைஞர் அவர்கள்.

இசைக்கு நல்ல குரல்வளம் தேவை. ஏறத்தாழ 80 ஆண்டுகள் தமிழர்களை ஆட்கொண்டது ‘உடன்பிறப்பே’என்றழைத்த கலைஞர் அவர்களின் வெண்கலக் குரல் தான். எனவே, இசையின் குணங்கள் அனைத்தையும் தனக்குள்ளே பெற்றவர் தான் நமது கலைஞர் அவர்கள். எனவே தான், இசையாய் கலைஞர் என்னும் தலைப்பு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இசை எங்கும் நிறைந்திருப்பதைப் போல, உலகம் முழுவதும் கலைஞர் அவர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்.

இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு வரவேற்புரை வழங்கும் வாய்ப்பை எனக்கு அளித்த ‘கலைஞர் – கலைஞர்’ குழுவுக்கு எனது நன்றியையும் - வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டு இது போல பலநிகழ்ச்சிகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !