Tamilnadu
தூத்துக்குடியில் முதலமைச்சர் நேரில் ஆய்வு : மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி, வெள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், அமைச்சர் பெருமக்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல், மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 19.12.2023 அன்று இந்தியப் பிரதமர் அவர்களை புதுதில்லியில் சந்தித்து, தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி, இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காகவும் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கோரிக்கை மனு அளித்தார்.
புதுதில்லியிருந்து நேற்று (20.12.2023) காலை சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, எழிலகத்திலுள்ள, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு சென்று அங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுடனும், வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு கொண்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள் வழங்கப்படுவது குறித்தும், வெள்ளம் சூழ்ந்து சென்றடைய முடியாத நிலையில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, உரிய அறிவுரைகளை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நேரில் சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக இன்று (21.12.2023) காலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி சென்றடைந்தார். தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சந்தித்து, வெள்ள சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அப்போது, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மறவன் மடம் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
டிசம்பர் 17-ஆம் தேதி அதிகனமழை பெய்ய தொடங்கியவுடன், 18-ஆம் தேதி முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மில்லர்புரம், பிரையன்ட் நகர், அண்ணா நகர், டீச்சர்ஸ் காலனி, ராஜீவ் நகர், சீலோன் காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்தில் சுமார் 600 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவும், மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அந்நிவாரண மையத்தில் நடத்தப்படும் மருத்துவ முகாமில் காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்திற்கு சென்று, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்து, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை, போர்வை, பாய், பிஸ்கட் மற்றும் ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, எட்டையபுரம் 3-வது கேட் மேம்பாலத்திலிருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, வெள்ள நீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், குறிஞ்சி நகர் போல்பேட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்களிடம் பாதிப்புகளின் விவரங்கள் குறித்து முதலமைச்சர் அவர்கள் கேட்டறிந்து, சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியினை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!