Tamilnadu
தென்மாவட்ட கனமழை : மக்களுக்கு உணவு, மருந்து தங்குதடையின்றி வழங்கப்படுவது குறித்து முதலமைச்சர் ஆய்வு !
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வரலாறு காணாத வெள்ளப் பெருக்கினை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் சந்தித்து, இம்மாதத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள இரண்டு பெரிய வெள்ள பாதிப்புகளுக்குத் தேவைப்படும் நிதியினை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிடக் கோரிக்கை மனுவை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று (20.12.2023) காலை சென்னை திரும்பிய முதலமைச்சர், சென்னை, எழிலகத்திலுள்ள, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு சென்று அங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், சேத விவரங்களையும் முதலமைச்சர்ருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
முதலமைச்சர் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுடன் வீடியோ கால் மூலமாக முகாம்களில் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், வழங்கப்படும் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுடனும், வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, ஆகியோருடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், மருத்துவ உதவிகளையும் குறைவின்றி செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். அத்துடன் சென்றடைய முடியாத நிலையில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களின் நிலை மற்றும் அவர்களை மீட்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்பணிகளை விரைவுப்படுத்தவும் கேட்டுக் கொண்டார்.
தண்ணீர் சூழ்ந்துள்ள கிராமங்களில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், மாவட்ட ஆட்சியர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும், பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க என்று அறிவுரை வழங்கினார்.
முன்னதாக, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிலையை கேட்டறிது உரிய அறிவுரைகளை வழங்கினார்.
முதலமைச்சர் அவர்களின் ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, கூடுதல் தலைமைச் செயலாளர்/வளர்ச்சி ஆணையர் திரு.நா. முருகானந்தம், உள்துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ.அமுதா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Also Read
-
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
-
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
-
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
-
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!