Tamilnadu
550 வீரர்கள் - 6 ஹெலிகாப்டர்கள் : தென் மாவட்டங்களில் துரிதமாக நடைபெற்று வரும் மீட்பு பணிகள்!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும்கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, எஸ். ஞானதிரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்தி பணிகளை விரைவுப்படுத்த கூடுதலாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகிய அமைச்சர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நியமித்துள்ளார்.
மேலும், கனமழையால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண்: 8148539914 மற்றும் “டிவிட்டர்” மூலமாக பதிவுகளை தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, "திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 550 வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க களமிறங்கியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது. தூத்துக்குடியில் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக்கப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர். 168 ராணுவ வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தங்க வளையலை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை: சென்னை எழும்பூர் நிலையத்தில் நெகிழ்ச்சி!
-
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் : 73 MP-க்கள் நோட்டீஸ்!
-
“தமிழ்நாடு வாக்களித்துவிட்டது; மே 4 தமிழ்நாடு வெல்லும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
-
“தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொள்கிறார் சந்திரபாபு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை.. 84% தாண்டிய வாக்குப்பதிவு!