Tamilnadu

instagram-ல் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞர் : அதிரடியாக கைது செய்த போலிஸ்!

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதி எட்டரை கிராமத்தை சேர்ந்த முகேஷ் (23) என்கிற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தி உள்ளிட்ட அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வசனங்களை பேசி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து எட்டரை கிராமத்தில் உள்ள கடைவீதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் முகேஷ் அரிவாளுடன் சுற்றித் திரிவதாகத் திருச்சி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் அங்கு சென்று முகேஷை பிடித்தனர். மேலும் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இது போன்ற அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடும் நபர்கள் அருவாள், கத்தி, போன்ற ஆயுதங்களைக் கொண்டு பிறந்தநாள் விழா மற்றும் பிற விழாக்களில் கேக் வெட்டும் நபர்கள் வில்லன் போன்ற தோனியில் பின் இசைகள் கொண்ட பாடல் வீடியோக்கள் பதிவிடும் நபர்கள் விபரங்களை உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Help Line 94874 64651 என்ற எண்ணிற்குத் தகவல் தெரிவிக்குமாறு போலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அபாயகரமான ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படங்கள் வெளியிடும் நபர்கள் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: 17 வயது சிறுவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்: டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!