Tamilnadu

”குறைசொல்ல மட்டும்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்” : ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட எழும்பூர் பகுதி மக்களுக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிவாரண உதவி பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று எழும்பூர் பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

நிவாரண நிதி குறித்து எடப்பாடி பழனிச்சாமி கேட்க வேண்டியது ஒன்றிய அரசிடம்தான். தமிழ்நாடு அரசிடம் அல்ல. ஒன்றிய அரசுதான் தமிழ்நாடு அரசுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்கவில்லை.எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு நிவாரணம் அளித்தாலும் பத்தாது. குறைசொல்ல மட்டும்தான் அவருக்குத் தெரியும்.

அதிமுக ஆட்சியில் ரூ. 7.50 லட்ச கோடி கடனைவைத்து விட்டுச் சென்றது. இந்த கடனை எல்லாம் சமாளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை மக்களுக்காகச் செயல்படுத்தி வருகிறார்.

2015 ஆம் ஆண்டு அ.தி.முக ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியை விட தற்போது கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கொடுத்துள்ள நிவாரண நிதி குறைவாக இருந்தாலும் முதலமைச்சர் இதைச் சமாளித்து மக்களுக்கான நிவாரண நிதியைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ஜம்மு காஷ்மீரில் ரணங்கள் ஆற்றப்பட வேண்டும்: 370 தீர்ப்பில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கருத்து!