Tamilnadu

மிக்ஜாம் புயல் : இழந்த சான்றிதழ்களை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம் : எப்போது ? எங்கே? - முழு விவரம் !

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இந்த புயல் கனமழை காரணமாக தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் குறிப்பிட்ட சில இடங்களில் வசிக்கும் மக்கள் பலரும் மீட்கப்பட்டு மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அதோடு புயல் அன்று 4-ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதோடு, மக்களுக்கு தேவையானவை இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. 3, 4 ஆகிய தேதிகளில் இடைவிடாமல் அதி பயங்கர கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

அந்த கனமழையும் பொருட்படுத்தாமல், மாநகராட்சி ஊழியர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், திமுகவினர், எம்.எல்.ஏ-க்கள் என பலரும் மக்களுக்கு தேவையானவை வழங்க முன் வந்தனர். மழையுடனும் களத்தில் இறங்கிய அவர்கள், இரவு, பகல் என்றும் பாராமல் தொடர்ந்து வேலை பார்த்து வந்தனர். மேலும் அந்தந்த தொகுதி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர்.

இந்த சூழலில் வரலாறு காணாத இந்த புயல் மழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதில் மக்கள் பலரது வீடுகளிலும் மழை வெள்ள நீர் புகுந்து பலவையும் சேதாரமாக்கியுள்ளது. அதில் குறிப்பிட்டு மக்கள் தாங்கள் இந்தியர்கள் என்பதற்கும், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதற்கும், படித்தவர்கள் என்பதற்கும் அடையாளமாக இருக்கக்கூடிய அனைத்தும் வீணாகி விட்டது.

இதையடுத்து இதற்கு மாற்று வழிவகை செய்யும் வகையில், தற்போது இதனை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி, பொது மக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வரும் 11-ம் தேதியும் (திங்கட்கிழமை), சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் வரும் 12ம் தேதியும் (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்படும்.

மேலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும் என்றும், மேற்படி சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வசதிக்கென, இ-சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள் தாங்கள் இழந்த சான்றிதழ்களை கட்டணமின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

Also Read: நீட் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் தமிழ்நாட்டு மக்கள்- 50 நாட்களில் பெறப்பட்ட 72 லட்சம் கையெழுத்துகள் !