Tamilnadu

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட இரண்டே நாளில் கர்னி சேனா தலைவர் சுட்டுக்கொலை : ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்ட இரண்டாவது நாளிலேயே ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிச.5ம் தேதி ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமோடி ஷியாம் நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை போலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்களை பிடிக்க போலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 2 நாளில் வீடுபுகுந்து முக்கிய பிரமுகர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை ராஜஸ்தானில் அடுத்த முதல்வர் யார் என இன்னும் பா.ஜ.க முடிவு செய்யாமல் இருப்பதால் இப்பிரச்சனையில் அடுத்தடுத்த நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தெலங்கானா தேர்தல் : “ஏமாற்றம் அளித்துள்ளது” : தோல்வியை ஏற்றுக்கொண்ட BRS.. KTR பதிவால் தொண்டர்கள் சோகம் !