Tamilnadu

”தனி சட்டமே இருக்கு - புரிதல் இல்லாமல் பேசும் அண்ணாமலை” : பதிலடி கொடுத்த அமைச்சர் பெரியகருப்பன்!

சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்து தட்டச்சர்கள் (நிலை-3) மற்றும் தட்டச்சு பணியிடங்களுக்காகப் பணி நியமன ஆணையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டுத் தேர்வான 32 நபர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தமிழ்நாட்டில் படித்து வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே 5500 காலிப்பணியிடங்களை நிரப்ப 4.5 லட்சம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, 3.5 லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறைக்கு என்று தனிச் சட்டம் உள்ளது. அதன் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் ஒளிவு மறைவின்றி நடைபெற்று வருகிறது. ஆனால் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை புரிதல் இல்லாமல் பேசுகிறார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும் தேர்வில் கலந்துகொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது ? - முழு கால அட்டவணை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை - முழு விவரம்!