Tamilnadu

“பாஜகவின் கருத்தியலை முறியடிக்க தந்தை பெரியாரின் கொள்கையே அடித்தளம்” - கி.வீரமணிக்கு சோனியா காந்தி கடிதம்

ஒன்றிய பாஜக அரசை விரட்ட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது. அந்த கூட்டணிக்கு 'இந்தியா' என்ற பெயரும் வைத்து, ஒவ்வொரு நகர்வையும் எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி செய்லபடுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 14-ம் தேதி தமிழ்நாட்டில் திமுக மகளிரணி சார்பில் 'மகளிர் உரிமை மாநாடு' நடைபெற்றது.

இந்த மாநாட்டில் நாடு முழுவதுமுள்ள இந்தியா கூட்டணி கட்சியின் முக்கிய பெண் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தினர். இந்த நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பேச்சை பாராட்டி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும் அவரை பெரியார் திடலுக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்தார்.

இவரது இந்த கடிதத்துக்கு தற்போது சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மக்களை பிரித்தாளும் பாஜகவின் கருத்தியலை முறியடிக்க தந்தை பெரியாரின் கொள்கைதான் அடித்தளமாக உள்ளது என தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள முழுவிவரம் பின்வருமாறு :

“அன்பார்ந்த வீரமணி அவர்களுக்கு.. தாங்கள் நலமுடன் இருக்க விழைகிறேன். சென்னை- பெரியார் திடலுக்கு என்னை அழைத்ததற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'இந்தியா' (I.N.D.I.A.) கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன். தங்களது கடிதத்தில் மிகவும் சரியாக விளக்கிக் காட்டியதுபோல இந்தக் கூட்டணி அரசியல் கூட்டணி என்பதைவிட மேம்பட்டது.

சமூகநீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்திட்டத்தின் மூலம்தான், மக்களைப் பிரித்தாளும் பாரதிய ஜனதா கட்சியின் கருத்தியலை தோற்கடிக்க முடியும். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கண்ணியமாக, சுயமரியாதையுடன் வாழ்க்கை நடத்திட தந்தை பெரியாரின் தொலை நோக்குதான் பாதை அமைத்துத் தந்தது.

நாடு தழுவிய சமூகநீதி இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த பிணைப்பிற்கு, பிற்போக்கு சக்திகளை எதிர்த்து தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் போராடியதுதான் அடித்தளமாக அமைந்துள்ளது. தந்தை பெரியாரின் தொலை நோக்கும், அவரது கொள்கை சார்ந்த உறுதியான நிலைப்பாடும் இன்றைக்கும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வழிநடத்தட்டும்! தங்களது வருங்கால செயல்பாடுகள் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

Also Read: INDANE சமையல் எரிவாயு பதிவு சேவையில் நிறுத்தப்பட்ட தமிழ் : இந்தி மட்டுமே இடம்பெற்றதால் அதிர்ச்சி !