Tamilnadu

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ்.. யார் யாருக்கு எத்தனை சதவீதம் ? - முழு விவரம் இங்கே !

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கை பின்வருமாறு :

"​இந்தியத் திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடே வியக்கும் வண்ணம் பொருளாதார வளர்ச்சியை அடைந்தது மட்டுமின்றி குறிப்பிடத்தக்க அந்நிய முதலீடுகளையும் தமிழ்நாடு ஈர்த்து வருகிறது.

எனவே, தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

​திருத்தப்பட்ட மிகை ஊதியச் சட்டம் 2015 இன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21000 என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர உச்சவரம்பும் ரூ.7000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2022-23 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையினை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.

1. இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

2. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20% மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

3. நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67% கருணைத்தொகை என மொத்தம் 10% மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

4. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும்.

5. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் வழங்கப்படும்.

6. இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000/- ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8400ம் அதிகபட்சம் ரூ.16800ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 83 ஆயிரத்து 787 தொழிலாளர்களுக்கு ரூ.402 கோடியே 97 லட்சம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். இது தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.

அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் எதிர் வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்."

Also Read: காலியாக கிடக்கும் மருத்துவ இடங்கள்.. கடிதம் எழுதியும் பதிலளிக்காத ஒன்றிய அரசு - அமைச்சர் மா.சு விமர்சனம்