Tamilnadu

“பட்டினி குறியீட்டின் தாக்கம் புரியாமல் கேலி செய்வதா?” - ஸ்மிருதி இரானிக்கு கனிமொழி MP கண்டனம் !

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பட்டினி குறித்து ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடுவது வழக்கம். இந்தியாவில் பா.ஜ.க, ஆட்சிக்கு வந்த பின்னர் பொருளாதார சூழல்களால் வறுமை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த வாரம் உலக அளவிலான பட்டினி குறியீடு தரவரிசை பட்டியல் வெளியானது.

Concern Worldwide and Welthungerhilfe என்ற ஜெர்மனியின் அமைப்பு இந்தாண்டு பட்டியலை வெளியிட்டது. உலகளவில் பட்டினியால் வாடும் நாடுகள், ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த தரவரிசையில் 125 நாடுகள் உள்ள நிலையில், இந்தியா 111-வது இடத்தில் உள்ளது.

உலக பட்டினி குறியீட்டில் (Global Hunger Index) ஆண்டுதோறும் வெளியிடப்படும் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நிலை மோசமாகி காணப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். மேலும் ஒன்றியத்தில் ஆளும் பாஜகவால்தான் இந்தியாவின் நிலை மோசமாகி வருவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் நேற்றைய முன்தினம் (அக் 20) உலக பட்டினி குறியீடு கணக்கெடுப்பு குறித்து ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் FICCI இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மாநாட்டில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்துகொண்டார். அப்போது அங்கிருக்கும் பெண்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அப்போது உலக பட்டினி குறியீடு குறித்து இவர் பேசியுள்ளது தற்போது பலர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து அவர் பேசியதாவது, "இப்போது தலைப்பு செய்திகளாக இருப்பதில் ஒன்று தான் உலக பட்டினி குறியீடு (Global Hunger Index) உள்ளது. இது எப்படி கணக்கிடப்படுகிறது? 140 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் சுமார் 3000 மக்களுக்கு GALAB மூலம் போன் கால் வருகிறது. (GALAB என்பது ஜெர்மனியின் ஆய்வு நிறுவனம்).

அந்த ஃபோன் காலை எடுத்ததும், நீங்கள் பசியோடு இருப்பீர்களா என்று அவர்கள் கேட்பார்கள். நீங்கள் ஆம் என்றால், அதைக்குறித்து கொள்வார்கள், இப்படித்தான் உலக பட்டினி குறியீடு (Global Hunger Index) கணக்கிடப்படுகிறது." என்று கூறினார். இவரது இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஒன்றிய அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "ஒன்றியத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உலகளாவிய பட்டினி குறியீட்டின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் கேலி செய்வதைப் பார்க்கும்போது மிக வேதனையாக இருக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடு, போதிய உணவு விநியோகம் மற்றும் குழந்தைகள் இறப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதில் பாஜக அரசாங்கத்தின் திறமை குறித்து இது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: “மோடி அரசின் கேடு கெட்ட கொடுமைகளையும் அம்பலபடுத்துங்கள்” : திமுக IT விங் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி !