Tamilnadu

விதிகளை மீறும் பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சி.வி.கணேசன் எச்சரிக்கை!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பட்டாசு தொழிற்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு விபத்தில்லாமல் பட்டாசு தொழிலை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.வி கணேசன், "உலகிலேயே அதிக பட்டாசு ஆலைகள் உள்ள இடமாகச் சிவகாசி திகழ்கிறது. பட்டாசு ஆலை விபத்துகளைத் தவிர்க்க அதிகாரிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பட்டாசு ஆலைகளில் உரிய அரசு அலுவலர்கள் தீவிர ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

விதிமீறலில் ஈடுபட்டிருக்கும் பட்டாசு ஆலைகள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆய்வின் போது அரசு அலுவலர்கள் தவறு செய்திருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: மகளிருக்கு ரூ.1500 உதவித் தொகை : திராவிட மாடல் அரசை பின்பற்றி தேர்தல் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ்!