Tamilnadu

148 பெண்கள், 2 திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோக்களை வழங்கிய முதலமைச்சர்.. அசத்தலான புதிய திட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.10.2023) சென்னை, தீவுத் திடலில் நடைபெற்ற விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா/ தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கு 1 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், 148 பெண் ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சாக்களை வழங்கும் விதமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில் “தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்கள், சொந்தமாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பினை உருவாக்கவும், அவர்களின் வருமானம் ஈட்டும் திறன் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டும், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா 1 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 10.07.2023 அன்று தலைமைச் செயலகத்தில், பத்து பெண் பயனாளிகளுக்கு புதிய ஆட்டோ ரிக்சாக்களுக்கான பதிவு ஆவணங்கள் மற்றும் அனுமதி ஆவணங்கள் வழங்கப்பட்டு இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், 15.08.2023 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருநங்கை ஓட்டுநர்களுக்கும் இம்மானியத் திட்டத்தினை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு மின்சாரம் / சி.என்.ஜி. / எல்.பி.ஜி. மூலம் இயங்கக் கூடிய ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்க தலா 1 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தினை தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கும், திருநங்கை ஓட்டுநர்களுக்கும் நீட்டித்து 16.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 148 பெண் ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா / தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கு 1 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட புதிய ஆட்டோ ரிக்சா வாகனங்களை வழங்கும் விதமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

Also Read: மாணவர்களின் உணவு உதவித் தொகை ரூ.1500ஆக உயர்த்திய திராவிட மாடல் அரசு: CMக்கு நன்றி சொன்ன அமைச்சர் உதயநிதி!