Tamilnadu

குன்னூர் கோர விபத்து : 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த 9 பேரின் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி !

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று மாலை சுற்றுலா பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மாலை நிகழ்ந்த இந்த கோர சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், இலேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்தார். இந்த சூழலில் இந்நிலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான மரப்பாலம் பகுதியில் அமைச்சர்கள் கா.இராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின், சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் தனித்தனி அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் முதலமைச்சர் அறிவித்த படி, விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர். மேலும் சிகிச்சை பெற்று வரும் மற்ற சுற்றுலா பயணிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும், அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை குறித்து கேட்டறிந்தும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தரமான மருத்துவத்தை வழங்க மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சு அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சு, "குன்னூர் மரப்பாலத்தில் சுற்றுலா பேருந்து விபத்தில் காயம் அடைந்த 46 பேர் சிறு காயங்களுடன் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உரிய மன நல ஆலோசனை நிபுணர்கள் மூலம் வழங்கி உரிய சிகிச்சை அளித்தபின் அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் தனித்தனி அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் முதலமைச்சர் அறிவித்த உயிரிழப்பின் இழப்பீட்டுத் தொகையான 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். விபத்தில் அதிக காயமுற்ற 4 பேர் உதகை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடைபெற்ற நொடி முதல் தற்போது வரை 19 மருத்துவர்கள் கொண்டு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் காயமுற்ற பயணிகளை தீயணைப்பு துறையுடன் ஒன்றிணைந்து இரவு முழுவதும் மீட்கும் பணியில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் விரைந்து செயல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்ததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது." என்றார்.

Also Read: ராகுல் காந்தி குறித்து ஆபாச பதிவு.. எழுந்த புகாரில் பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலிஸ் !