Tamilnadu
”குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் கட்டணம்தான்”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!
இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை - மைசூரு இடையே முதல் வந்தே பாரத் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது.
பின்னர் சென்னை - கோவை இடையே இரண்டாம் கட்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்மையில் மூன்றுவாது வந்தே பாரத் ரயில் திட்டத்தை சென்னை - நெல்லை இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்நிலையில் இந்த வந்தே பாரத் ரயிலுக்காக இதுநாள்வரை வழக்கமாக சென்று வந்த வைகை, பாண்டியன், பொதிகை உள்ளிட்ட அதிவிரைவு ரயில்களின் நேரத்தை மாற்றி தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது x சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயணிக்கக்கூடிய பொதிகை, பல்லவன், நெல்லை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது அல்லது முற்றிலும் சிதைப்பது எனும் ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகவே மக்கள் இதனை பார்க்கின்றனர். குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!