Tamilnadu
சிறுநீரகம், கல்லீரல், கண்.. உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியருக்கு அரசு மரியாதை: அமைச்சர் மா.சு பேட்டி!
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் காலணியைச் சேர்ந்த வடிவேல் என்பவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியன்று நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய குடும்பத்தினர் ஒப்புதல் வழங்கினர். இதனால் மதுரை தனியார் மருத்துவமனையில் இருந்த வடிவேலுவின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு தகனம் செய்வதற்காக இன்று அவரது சொந்த ஊரான ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூருக்கு கொண்டு வரப்பட்டது.
சின்னமனூர் காந்தி நகர் காலணியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட வடிவேலுவின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மரியாதை செலுத்தினார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே, எம்எல்ஏக்கள் கம்பம் - இராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "மறைந்த வடிவேல் பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த போது மாடு குறுக்கே வந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 24.09.2023 அன்று மூளைச்சாவு அடைந்து விட்டார் என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். வடிவேலுவின் சிறுநீரகம், கல்லீரல், கண் போன்ற பல உடல் உறுப்புகளை தானம் செய்வதாக வடிவேலுவின் மனைவி பெற்றோர் முன்வந்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-ம் தேதி அன்று உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் தியாகத்தை மதிக்கும் வகையில் அரசு மரியாதை செலுத்தப்படும் என்றார். அதன்படி இருந்து அரசு சார்பில் மரியாதையை செலுத்தப்படுகிறது. மறைந்த வடிவேலுவின் தந்தை 25 ஆண்டுகளாக கண் பார்வை இல்லாமல் உள்ளார். அவருக்கு கண் மாற்று சிகிச்சை செய்வதற்கு வாய்ப்பு இருந்தால் அதற்கான பணிகளை செய்து கொடுப்போம்" என்றார்.
தொடர்ந்து மறைந்த வடிவேலுவின் உடலுக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனைத்து சடங்குகளும் முடிந்த பின் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்பட உள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!