Tamilnadu
“எனது பெரியப்பாவும், அப்பாவும் இரட்டை குழல் துப்பாக்கி போன்றவர்கள்..” - நடிகர் பிரபு புகழாரம் !
சென்னை கொளத்தூர் அகரம் ஜெயின் பள்ளி வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் கிழக்கு - மேற்கு பகுதி திமுக சார்பில் திரைவானின் விடிவெள்ளி திராவிட தமிழ் பள்ளி என்கின்ற பெயரில் மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கழக சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்கறிஞர் சந்துரு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரைப்பட நடிகர் பிரபு, கவிஞர் நந்தலாலா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பகுதி செயலாளர் ஐ சி எப் முரளி, நாகராஜ், மண்டல குழு தலைவர்கள், வார்டு மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய நடிகர் பிரபு கலைஞருக்கும், சிவாஜி கணேசனுக்கும் உள்ள நட்புறவை பற்றி பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “கொட்டும் மழையில் பொதுமக்கள் அனைவரும் பொது கூட்டத்தை கேட்க காரணம் நமது முத்தமிழறிஞர் கலைஞர் மீது கொண்ட பிரியமே. எனது தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் இருவருக்கும் இடையே நட்பு ரீதியான ஒற்றுமை இருந்தது.
குறிப்பாக எனது தந்தை நடித்தால் அந்த திரைப்படத்தின் திரைக்கதை வசனகர்த்தாவாக முத்தமிழறிஞர் கலைஞரே இருப்பார். அவர்கள் இரட்டை குழல் துப்பாக்கி போன்றவர்கள். எனது தந்தையின் திருமணம் சுவாமி மலையில் நடைபெற்றது அதற்கு மணமகன் தோழனாக இருந்தவர் கலைஞர் தான். என்னுடன் எப்பொழுதும் மிகவும் பாசமாக இருக்கக்கூடியவர் எனது எனது பெரியப்பா முத்தமிழறிஞர் கலைஞர்.
முத்தமிழறிஞர் கலைஞரின் வசனம் என்பது மிகவும் அருமையான ஒன்று அதற்கு உதாரணமே பராசக்தி. இந்த படத்தின் வசனங்களை மக்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். கலைஞருக்கும் எனது அப்பாவுக்கும் சில ஆண்டுகளில் பெரிதாக பேச்சு இல்லை. அப்போது கலைஞர் என்னிடம் முரசு என்கின்ற ஒரு தொலைக்காட்சியை ஆரம்பிக்க காரணம் எனது நண்பன் சிவாஜி கணேசனின் திரைப்படங்களை பார்ப்பதற்கு தான் என்று பலமுறை கூறியுள்ளார்.
என்னை நடிகராக அங்கீகரித்து கலைமாமணி விருது கொடுத்தவர் எனது பெரியப்பா; எனக்கு அவர் எம்.ஜி.ஆர். விருதும் கொடுத்தார். இந்த கொட்டும் மழையிலும் நீங்கள் நின்று எனது பேச்சை கேட்பதற்கு கழக சகோதர சகோதரிகளே மிகவும் நன்றி. நடிகர் திலகம் என மக்களால் போற்றப்படம் எனது தந்தையின் திருவுருவ சிலையை அகற்றப்பட்ட பின்பு அதே இடத்தில் அந்த சிலையை நிறுவிய தமிழ்நாடு முதலமைச்சர், எனது அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!