Tamilnadu

சென்னை மின்சார ரயிலில் 37 சவரன் நகை திருட்டு.. 48 மணி நேரத்தில் குற்றவாளி சிக்கியது எப்படி?

டெல்லியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சொந்த ஊரான மயிலாடுதுறைக்குச் செல்வதற்காகக் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை வந்துள்ளார். தாம்பரம் மின்சார ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவர் எடுத்து வந்திருந்த பை காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த பையில் 37 சவரன் தங்க நகைகள் மற்றும் செல்போன், அடையாள அட்டைகள் இருந்ததால் இது குறித்து எழும்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். தனிப்படையினர் எழும்பூர், பீச், மைலாப்பூர், பார்க், பார்க்டவுன் முதல் தாம்பரம் வரை உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் அனைத்து மின்சார ரயில் வண்டிகளிலும் சோதனை செய்தனர்.

அப்போது தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர்தான் பையைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலிஸார் அவரை பிடித்து விசாரணை செய்தபோது நகை இருந்த பையை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர் பாபுவை கைது செய்தபோலிஸார், அவரிடம் இருந்து 37 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்து 48 மணிநேரத்திற்குள் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து 37 சவரன் நகைகளை மீட்ட தனிப்படை போலிஸாருக்கு காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு பாராட்டியுள்ளார்.

Also Read: முதுகு தண்டுவடத்தில் Operation.. “வேறொருவரோட எலும்பை பயன்படுத்தனும்..” - VJ கல்யாணிக்கு என்ன ஆச்சு ?