Tamilnadu

சாலையோரம் இருந்த பெரிய இரும்பு பெட்டி.. புதையல் இருப்பதாக திரண்ட பொதுமக்கள்: கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள சந்தைப்பேட்டையில் பழங்கால பெரிய இரும்புப் பெட்டி ஒன்று ஆதரவற்ற நிலையில் சாலையோரம் இருந்தது. இந்த பெட்டி பணம், நகைகள் வைத்துப் பாதுகாக்கும் லாக்கர் பெட்டிபோல் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இந்த பெட்டியில் புதையல் ஏதாவது இருக்கும் என நினைத்து அப்பகுதியில் குவிந்தனர். உடனே இரும்பு பட்டி பற்றிய தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் இரும்புப் பெட்டி இருந்த இடத்திற்குப் படையெடுத்து வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் பற்றி போலிஸார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியவந்தது. உடனே அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு இரும்புப் பெட்டியை உடைக்கு முயற்சி செய்து பார்த்தனர். ஆனால் இரும்புப் பெட்டியை உடைக்க முடியவில்லை. பின்னர் இந்த பெட்டி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போதுதான், இதேபகுதியைச் சேர்ந்த இந்தியாஸ் என்பவர் 25 ஆண்டுகளாக இந்த இரும்புப் பெட்டியைப் பயன்படுத்தி வந்ததும், இப்பெட்டியை தற்போது பராமரிக்க முடியாததால் மசூதிக்கு வழங்குவதற்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது. அப்போதுதான் இப்பெட்டியைப் பார்த்து பொதுமக்கள் இதில் புதையல் இருக்கும் என நினைத்து வதந்தி பரவியதும் தெரியவந்துள்ளது. மேலும் இரும்பு பெட்டியை தாலுக்கா அலுவலகத்திற்கு எடுத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: விடுறையை கழிக்கச் சென்ற இடத்தில் நடந்த துயரம்.. இரண்டு நண்பர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாப பலி!