Tamilnadu

YouTube சேனல் நடத்தி வந்த வாலிபர் கடத்தல்.. ஒரு மணி நேரத்தில் மீட்ட போலிஸ்: விசாரணையில் பகீர் உண்மை!

தருமபுரி மாவட்டம், தம்மனம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார். இவர் தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள தனியார் கட்டடத்தில் யூடியூப் சேனல் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் 12 பேர் கொண்ட கும்பல் திடீரென ஆனந்தகுமாரின் அலுவலகத்துக்குள் புகுந்துள்ளனர்.

அப்போது அவர்கள், "எதற்காக எங்களது யூடியூப் சேனலில் போலியாகப் பார்வையாளர்களை அதிகபடுத்தியுள்ளாய். இதை நீ மட்டும் செய்தாயா அல்லது வேறு யாருக்காவது அதில் தொடர்பு உள்ளதா?" என கூறி அவரை தாக்கியுள்ளனர்.

பின்னர் அந்த கும்பல் அலுவலகத்தில் இருந்த, 70 மொபைல் போன்கள், 5 மடிக்கணிகளை தூக்கிச் கொண்டு, ஆனந்தகுமாரை காரில் கடத்தி சென்றனர். பிறகு அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து உடனே போலிஸார் தனிப்படை அமைத்துக் கடத்தல் கும்பலைத் தேடிவந்தனர். இந்த நிலையில், தருமபுரி அடுத்த குண்டல்பட்டியில் ஆனந்தகுமாரை காரில் கடத்தி சென்ற 12 பேர் கொண்ட கும்பலைக் காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தொழில் போட்டியில் இந்த கடத்தல் சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. ஆனந்தகுமாரைக் கடத்திய சின்ன சாமி என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வந்தது தெரியவந்தது. ஆனந்தகுமார் சின்ன சாமியின் யூடியூப் சேனலில் அதிக பார்வையாளர்கள் உள்ளது போல், பொய்யான தகவலைப் பதிவிட்டுள்ளார். இதனால் அவரது சேனல் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆனந்தகுமாரைக் கடத்த முற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட சின்ன சாமி, இவருடைய கூட்டாளிகள் சீராளன், சுந்தரம், சுரேஷ், முருகன், ராமு, சதீஷ், பெரியசாமி, சந்திரன்), தினேஷ்குமார், மணி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், 6 பைக்குகள் மற்றும், 70 செல்போன்கள், 5 மடிக்கணினிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தருமபுரியில் யூடியூப் சேனல் நடத்தி, ஏற்பட்ட தொழில் போட்டியில், பட்ட பகலில் கத்தி முனையில், ஒருவரை 12 பேர் கொண்ட கும்பல் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: இறந்துபோன தந்தைக்கு மனைவியாக நடித்த மகள்.. சண்டையில் போலீசிடம் போட்டுக்கொடுத்த கணவர்.. நடந்தது என்ன ?