Tamilnadu

எருமை மாட்டுக்காக மல்லுக்கட்டிய 2பேர்.. காவல் நிலையம் வரை சென்ற விவகாரம்: போலிசார் செய்த ஸ்வாரசிய நிகழ்வு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைத்துள்ளது கீழபழஞ்சநல்லூர் என்ற கிராமம். இங்கு பழனிவேல் என்பவர் எருமை மாடு ஒன்று வளர்த்து வந்துள்ளார். இந்த சூழலில் சிதம்பரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர், பழனி வைத்திருந்த எருமை மாட்டை தன்னுடையது என்று உரிமை கொண்டாடினார். தொடர்ந்து இந்த சம்பவத்தால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் காவல் நிலையம் வரை இந்த விவகாரத்தை கொண்டு சென்றனர். அங்கே விசாரிக்கையில், சிதம்பரத்தை சேர்ந்த பாலமுருகன், தன்னிடம் இருந்த 6 எருமை மாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகவும், எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அதில் 5 மாடுகள் பழஞ்சநல்லூரில் இருப்பதாக கிடைக்கப்பட்ட தகவலை அடுத்து அந்த மாடுகள் மீட்கப்ட்டதாகவும், மீதமுள்ள ஒரு மாட்டை மட்டும் காணவில்லை என்றும் பாலமுருகன் தெரிவித்தார்.

கோப்பு படம்

மேலும் காணாமல் போன மாடுகளில் மீதமுள்ள அந்த ஒற்றை மாடு பழனிவேல் வீட்டில் இருப்பது தெரிந்து அங்கே சென்று கேட்கையில் அவர் அது அவரது மாடு என்று கூறி வந்ததாகவும், எனவே தனது மாட்டை மீட்டு தரும்படியும் காவல்நிலையத்தில் பாலமுருகன் தெரிவித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து பழனியிடம் விசாரித்தனர்.

அப்போது பழனிவேல், தன்னிடம் இருக்கும் எருமை மாட்டை, தான் திருமூலஸ்தானம் பகுதியில் இருந்து வாங்கியதாகவும், இது தன்னிடம் பல மாதங்களாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இந்த பிரச்னையை சுமூகமாக முடிக்க எண்ணிய போலீசார், பழனியிடம் இருந்த மாட்டை மீட்டு காவல்துறை கொண்டு வந்தனர்.

அங்கே வைத்து, இந்த மாடு யார் மீது பாசமாக உள்ளதோ, அவர்கள் தான் இதன் உரிமையாளர் என்று கண்டறிந்து விடலாம் என்று எண்ணி பழனி மற்றும் பாலமுருகன் இருவரையும் வரவழைத்தனர். அதன்படி மாட்டின் கயிறை அவிழ்த்து விட்டு இருவரையும் நெருங்கி கட்டி பிடிக்க கூறினர். அதன்படி இருவரும் பிடிக்கையில், அந்த மாடு தன்னை வளர்த்து வரும் பழனியிடம் பாசமாக இருந்துள்ளது.

மேலும் பழனி செல்லும்போதும் அவர் பின்னாலே அந்த எருமை மாடு சென்றுள்ளது. இதையடுத்து மாட்டை பழனிவேலிடம் போலீசார் ஒப்படைத்து இந்த வழக்கை சுமூகமாக முடித்தது வைத்தனர். இது அனைவர் மத்தியிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: சென்னையில் நடு ரோட்டில் பற்றி எரிந்த விலை உயர்ந்த BMW கார்.. பதறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்!