Tamilnadu

ரூ.4,800 கோடி முறைகேடு.. EPS மீது புதிதாக வழக்கு தொடர தி.மு.கவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4 ஆயிரத்து 800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகப் புகார் செய்யப்பட்டது.

இந்த புகார் மீது சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாகத் தனது வழக்கைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டு ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்று கோரினால் சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் புதிய மனு கொடுக்கலாம் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுமதி அளித்து நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: 'தமிழ்நாடு'- சொல் அல்ல ; தமிழரின் உயிர்; இந்தியா முழுதும் பரவட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!