Tamilnadu
”தமிழ்நாடு அமைதியாக இருப்பது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிடிக்கவில்லை”: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தமிழ்நாடு வளர்வது, அமைதியாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. குழப்பம் ஏற்படுத்தி, இந்த மாநிலத்தைக் கெடுக்க நினைக்கிறார். அவரிடம் நல்லெண்ணம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் THE WEEK" ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணல் வருமாறு:-
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு மாநிலங்களிலும் புகார் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அத்தகைய சூழல் நிலவுகிறதே?
ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநராக வந்தது முதல் தமிழ்நாட்டில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்துவதையே தனது வேலையாக வைத்திருக்கிறார். அவருக்குப் பலமுறை இதனை உணர்த்தியாகி விட்டது. ஆனாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி அவர்கள் விடுத்த அறிக்கையானது, ஆளுநர் ரவியின் அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறுவதாகும். இது நிர்வாக ஒழுக்க மீறல் ஆகும்.
ஒரு அமைச்சரை நியமிப்பதும் – அந்த அமைச்சரை நீக்குவதும் முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்புரிமை சார்ந்ததே தவிர - வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை.
ஒரு அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதால் - அவரைத் தான் நியமிப்பதாகவோ - அதனாலேயே நீக்கி விடலாம் என்றும் பொருள் அல்ல. அந்த அதிகாரம், நியமனப் பதவியில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் ஆளுநருக்கு இல்லை. அதனை அவர் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவருக்கான வேலைகளை மட்டும் அவர் பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் வைத்துள்ளார். அதனைப் போட்டு அனுப்ப வேண்டும்.
அதை விட்டுவிட்டு தனக்கு உரிமையில்லாத செய்கைகளில் மூக்கை நுழைத்து மூக்கறுபட்டுக் கொண்டு இருக்கிறார் ஆளுநர்.
தமிழ்நாடு வளர்வது, அமைதியாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. குழப்பம் ஏற்படுத்தி, இந்த மாநிலத்தைக் கெடுக்க நினைக்கிறார். அவரிடம் நல்லெண்ணம் இல்லை.
ஆளுநர்களால் அடிக்கடி தொல்லைக்கு உள்ளாகும் மாநிலங்கள் இதனை எதிர்கொள்ள ஒரு பொதுவான வழிமுறை வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
ஆளுநர் பதவியையே நீக்கிவிடுவதுதான் ஒரே வழி!
மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கத் தொடங்கிய முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பிரதமர் மோடி இதை ‘இலவசக் கலாச்சாரம்’ என்றும், ‘இது பொருளாதாரத்தைப் பாதிக்கிறது’ என்றும் கூறுகிறாரே?
இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்று வாக்குறுதி கொடுத்தது குஜராத் பா.ஜ.க. மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்று சொல்லி வாக்கு கேட்டது கர்நாடக பா.ஜ.க. ஆனால் பிரதமர் மோடி, இலவசங்களுக்கு எதிராகப் பேசுகிறார். இந்த மாநில பா.ஜ.க. எல்லாம் அவரது கட்டுப்பாட்டில் இல்லையா?
வறுமையும் மக்கள்தொகையும் அதிகமாக உள்ள நாட்டில் இலவசங்கள் தவிர்க்க முடியாதவை ஆகும். இதனை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டுள்ளது.
“தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது. ஆனால் சரியான வாக்குறுதிகள் எது, பொதுப் பணத்தைச் செலவிடுவதற்கான சரியான வழி எது என்பதுதான் எங்களது கேள்வி" என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் கூறியிருந்தார்.
''உழவர்களுக்கு மின்சாரம், விதைகள், உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை இலவசமாகக் கருதமுடியுமா? இலவச சுகாதாரச் சேவைகள், இலவச குடிநீர், நுகர்வோருக்கு இலவச மின்சாரம் ஆகியவற்றையும் இலவசமாகக் கருதமுடியுமா? மக்களின் ஊதியம், வாய்ப்புகள் போன்றவற்றில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகளை ஈடுசெய்ய வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டமே சொல்கிறது" என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
இல்லாத மக்களுக்கு உதவத்தான் அரசாங்கம் இருக்கிறது. இலவசமாக எதையும் தரமாட்டோம் என்று இருக்க முடியாது. ஏழைகளுக்குத் தருவதை குறை சொல்லும் பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தில்தான் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இது இலவசமா? சலுகையா? உதவியா? கைம்மாறா?
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையேயான வேறுபாடு என்ன?
இரண்டுமே மக்கள் பணிதான். எதிர்க்கட்சித் தலைவராக வாதாடினேன். முதலமைச்சராக கையெழுத்துப் போட்டு நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டுகிறேன்.
காந்தி குடும்பத்தைக் குறிவைத்து வாரிசு அரசியல் என்று பிரதமர் மோடி விமர்சிக்கிறார். இதில் நியாயம் இருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா?
எங்களைப் பற்றி குறை சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால் வாரிசுகள் என்கிறார் பிரதமர் மோடி. இதெல்லாம் முப்பது ஆண்டுகளாக நான் கேட்டுக் கேட்டு புளித்துப் போன குற்றச்சாட்டுகள். வேறு புதிதாக எதையாவது சிந்தித்துச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!