Tamilnadu
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகளின் வெவ்வேறு தீர்ப்பு.. முழு விவரம் இதோ !
அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ. நிஷா பானு மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் கடந்த 27 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொள்ள அவர் மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை., இதன் மூலம் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை என குறிப்பிட்டார்.
அதேபோல், அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "செந்தில் பாலாஜி கைதை பொறுத்தவரை சட்ட விதிகளின் படிதான் மேற்கொள்ளபட்டுள்ளது. எந்த விதி மீறலும் இல்லை எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை கடந்த 27 ஆம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். அந்த தீர்ப்பின் முழு விவரம் பின்வருமாறு : -
நீதிபதி J. நிஷாபானு தீர்ப்பு விவரம் :
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரிகள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டவரை சமந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்க மட்டுமே கோர முடியும். 24 மணி நேரத்திற்கு பிறகு அமலாக்கத் துறை எவரையும் தனது காவலில் வைத்திருக்க முடியாது. அதனால் செந்தில்பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்தது சட்டவிரோதமானது.
அதேசமயம் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு எடுத்த நேரத்தில், நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய உத்தரவு சட்டவிரோதமானது என்பதால், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணக்கு உகந்ததுதான். அமலாக்கப்பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் இல்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலில் இருப்பதாக கருதக்கூடாது என்கிற மேகலா தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
நீதிபதி D.பரத சக்ரவர்த்தி தீர்ப்பு விவரம் :
நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பிறகு ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. கைது காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன, உறவினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளன என்பதால் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளும், குற்ற விசாரணை முறைகளும் மீறப்படவில்லை என்பது உறுதியாகிறது.
சிறப்பு சட்டத்தில் குறிப்பிட்ட பிரிவுகள் இல்லாவிட்டால் குற்ற விசாரணை முறை சட்டம் பொருந்தும். அதன்படி, நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கும் 41ஏ பிரிவு பொருந்தாது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முழுமையாக இயந்திரத்தனமாக செயல்பட்டு நீதிமன்ற காவலில் அடைத்து உத்தரவு பிறப்பித்தார் என்பதை ஏற்க முடியாது.
கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கும்வரையில் செந்தில்பாலாஜியிடம் ஒரு நிமிடம் கூட அமலாக்கத்துறை விசாரணை நடத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கை பொறுத்தவரை மின்னனு பணப்பரிவர்த்தனைகள், வெளிநாடு முதலீடுகள் உள்ளிட்டவை நடைபெறுவதால் உண்மையை கண்டறிவதற்கு, அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிப்பது அவசியமாகிறது. அதனால் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டிய பலனை மறக்க முடியாது.
மருத்துவமனையில் உள்ள முதல் 15 நாட்களை நீதிமன்ற காவலாக கருத முடியாது, அந்த நாட்களை கழித்துக்கொள்ள வேண்டும். ஜூன் 15ஆம் தேதி மருத்துவ அறிக்கையின் அடிப்படயில் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்ட நிலையில் உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. அதற்கு அவர்களுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், அடுத்த நாளே இந்த நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கூறியது நியாயமா முறையா என்ற கேள்வியை என்பதை அமலாக்கத் துறையினரே விட்டுவிடுகிறேன்.
காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியில் வந்து அங்கேயே சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் 10 நாட்களுக்கு அங்கேயே சிகிச்சையை தொடரலாம், ஆனால் கூடுதல் நாட்கள் சிகிச்சை தேவைப்பட்டால் சிறை மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும். அவருக்கு சிகிச்சை அளித்த காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அங்கே சென்று சிகிச்சை வழங்கலாம்.
மருத்துவ ரீதியாக செந்தில்பாலாஜி தகுதி பெற்றுவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அமலாக்கத்துறை அணுகி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரலாம். அப்போது நீதிமன்ற காவல் 15 நாட்கள் முடிந்துவிட்டது என கூறி அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரிக்க கூடாது என முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது என மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் இந்த வழக்கை மூன்றாவதாக ஒரு நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
Also Read
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!
-
தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் ஆ.மணி MP வலியுறுத்தல்!
-
பொள்ளாச்சி ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்திற்கு மாற்றுவது எப்போது : திமுக MP ஈஸ்வரசாமி கேள்வி!
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!