Tamilnadu

எக்ஸ்பிரஸ் இரயிலின் கழிவறையில் விழுந்த தங்க சங்கிலி.. உரியவரிடம் ஒப்படைத்த போலிஸ்: நெல்லையில் நெகிழ்ச்சி!

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவர் நேற்று மாலை திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக வந்தடைந்தார். ரயிலில் இருந்து இறங்கிய போது தனது கழுத்திலிருந்து இரண்டு சவரன் தங்கச் சங்கிலி காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.

மேலும் தான் பயணித்து வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் பி2 கோச்சில் சென்று தேடி பார்த்துள்ளார். அப்போது செயின் கிடைக்காததால் காவல் நிலையம் மற்றும் ஆன்லைனில் புகார் அளித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதோடு ரயிலில் வரும்போது செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கிடையே கழிவறைக்கு சென்றதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் பராமரிப்பு பணிகளுக்காக செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது எழும்பூர் போலீசார் அளித்த தகவலின் படி செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்களோடு சேர்ந்து ஆர்பிஎப் போலீசார் கழிவறையில் தேடி பார்த்துள்ளனர். அப்போது கழிவறையிலிருந்து ரயிலில் உள்ள செப்டிக் டேங்கிற்குள் செல்லும் குழாயில் கோமதியின் இரண்டு சவரன் தங்கச் சங்கிலி இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து செங்கல்பட்டு ஆர்பிஎப் காவல் நிலையத்திற்கு வரும்படி கோமதிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கோமதி தன்னுடைய சங்கிலி தான் என சரி பார்த்து பெற்று சென்றார். மேலும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த ஊழியர்கள் மற்றும் ரயில்வே போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் இரயில் பயணிகளை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திடீரென வெடித்த டயர்.. பற்றி எரிந்த பேருந்து: அதிகாலை நடந்த கோர சம்பவத்தில் 25 பேர் உடல் கருகி பரிதாப பலி