Tamilnadu
பெண் IPS இடம் அத்துமீறிய முன்னாள் DGP.. அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்துக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கடந்த 2021 பிப்ரவரி 21-ம் தேதி அதாவது அதிமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வந்த இவர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கே தன்னுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், இதுகுறித்து மேலிடத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது இவரை செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி.கண்ணன் தடுத்து நிறுத்தி சமாதானம் பேச முயன்றுள்ளார்.
இதையடுத்து இது பெரிய பிரச்னையாக மாறி, சில போராட்டங்களுக்கு பிறகே அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் கொடுத்தார். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி தீவிர விசாரணை மேற்கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குப் பதியப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சுமார் 2 ஆண்டுகளாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அரசு தரப்பில் 68 பேர் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை ஜூன் 12 ஆம் தேதி நிறைவு பெற்றதாக அறிவித்த நீதிபதி புஷ்பராணி, வரும் ஜூன் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி இன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார். மேலும் புகார் கொடுக்க விடாமல் தடுத்த எஸ்.பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!