Tamilnadu

“பயம் TO பகை” : பாஜகவின் தனிமனித குறி.. அமைச்சர் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுவது ஏன்?

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் வீட்டில் நேற்று தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் அமைச்சரின் அறையில் சோதனை நடத்தினர் .

சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்ற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை உறவினர், குடும்பத்தினரை கூட சந்திக்க விடவில்லை. தொடர்ந்து அவருக்கு மன அழுத்தத்தை அதிகாரிகள் கொடுத்து வந்தனர். இந்த சூழலில் சோதனை நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யப்போவதாகவும், தங்களுடன் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வருமாறும் அதிகாரிகள் அழைத்தனர்.

முறையான அனுமதி, நோட்டீஸ் எதுவும் இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் கைது செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில், அவருக்கு மேலும் மன அழுத்தத்தையும் கொடுத்தது. இந்த நிலையில், அமைச்சர் செல்லும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்ப்பட்டது. இதனால் கதறி துடித்த அமைச்சரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அமைச்சருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மன அழுத்தம், டென்சன் என அமலாக்கத்துறையினரின் நடவடிக்கை காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மயக்கம் ஏற்பட்டு, நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுவது ஏன்? என்பது குறித்து காண்போம்!

பாஜகவின் தனிமனித பகை

ஒரு தனி நபரின் அரசியல் பகையும், ஒரு கட்சியின் சித்தாந்த ரீதியான அரசியல் பகையும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் உச்சமாக மாறியிருக்கிறது.

கொங்கு மண்டலத்திலாவது சற்று வாக்குகளை வாங்க முடியும் என பாஜக நம்பிக் கொண்டிருந்தது. அந்த நம்பிக்கையை முற்றாக சிதைத்தவர் அமைச்சர் செந்தில்பாலாஜி.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பாஜகவில் யார் நின்றாலும் தமிழ்நாடு மக்கள் அவர்களை தோற்கடிப்பார்கள் என்ற சூழல் இருக்கும்போது தனது தோல்விக்கு காரணம் செந்தில் பாலாஜி என நினைத்து அவரை பழிவாங்கும் எண்ணத்தில் சுற்றிக்கொண்டிருந்தார் அண்ணாமலை.

அண்ணாமலையின் அரசியல் தில்லுமுல்லுகளை இன்ச் இன்சாக விமர்சித்து அம்பலப்படுத்தி வந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ரபேல் வாட்ச் பில் எங்கே? என்ற கேள்வியை செந்தில் பாலாஜி எழுப்பியதை அண்ணாமலை தனக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாக கருதுகிறார்.

கடந்த மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித்தேர்தல், இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் பாஜக கூட்டணி தோல்விக்கு காரணக்கர்த்தாவாக களத்தில் பணியாற்றிய மாண்புமிகு அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் வேட்கை பாஜகவுக்கு அதிகமானது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, "அமலாக்கத்துறை Busyஆக உள்ளதாகவும் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை விரைவில் சோதனை செய்யும்" என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு பாஜகவும் அதிமுகவும் அவர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பியிருந்தார்கள், தற்போது அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, டெல்லி, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளது தற்போது தமிழ்நாடு அரசிற்கு எதிராக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது பா.ஜ.கவிற்கு ஏன் பயம்

2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக அதிகமாக மேற்கு மாவட்டத்தில் வெற்றி பெற்றது. பாஜகவும் 2 இடங்களில் வெற்றி பெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கரூர் ஆகிய 5 மாநகராட்சிகளையும், 100-க்கும் மேற்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகளில் அதிக இடங்களையும் கைப்பற்றி திமுக வெற்றி பெற்றது. இதற்கு முழு காரணமாக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்று கூறப்பட்டது.

பாஜக அனைத்துத் தேர்தல்களிலும் மண்ணைக் கவ்வினாலும், கொங்கு நாடு என்று கனவு கண்டனர். ஆனால், அந்த கனவையும் செந்தில் பாலாஜி கலைத்து விட்டார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே கரூர் மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் வெற்றி பெற பெரிதும் காரணமாக இருந்தவர் செந்தில் பாலாஜி. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கருர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெரும் என்று சவால் விட்டு வெற்றியும் பெற வைத்தார்.

அதில் தோல்வியுற்றவர்களில் பாஜகவின் மாநிலத் தலைவர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் செந்தில் பாலாஜி பணியாற்றினால் நோட்டாவை விடவும் நிலமை மோசமாகிவிடும் என்ற பயத்தில் இது போன்ற சோதனைகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “22 மணி நேரம் விசாரணை.. கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கவில்லை..” : நீதிபதியிடம் வழக்கறிஞர் NR.இளங்கோ வாதம்!