Tamilnadu

“மாநில உரிமைகளை மீறும் மருத்துவ பொதுக் கலந்தாய்வை தடுத்தே தீருவோம்..” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி !

சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை மருத்துவக் கல்லூரியின் 187வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மருத்துவ கல்வி இயக்குநர் சாந்திமலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அகில இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தப்பட்டால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான முன்னுரிமை பறிபோகும் என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவ பொது கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியானதும், ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. மாநிலங்களின் பங்பளிப்பை குறைக்கும், விதிமுறைகளுக்கு எதிரானது என பல்வேறு விசயங்கள் குறிப்பிட்டு, பொது கலந்தாய்வு ஏற்புடையதல்ல என கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. மாநில உரிமைகளை மீரும் வகையில் அறிவிப்புகள் ஏற்புடையதல்ல.

அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொது கலந்தாய்வு நடத்தப்பட்டால் அதனை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இது குறித்து, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டுள்ளது. கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா முடிந்ததும் 16,17,18 ஆகிய தேதிகளில் டெல்லி சென்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம்.

பொது கலந்தாய்வு நடந்தால் மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு சலுகைகளும் பாதிக்கப்படும். இதனால், தமிழ்நாடு மக்களின் கோரிக்கையாக ஒன்றிய அரசிடம் முறையிடுவோம். ஒன்றிய கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான ஒடிசாவிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் என்பதால் செயல்படுத்தியதாக அவரே தெரிவித்தார்.

தற்போது நீட் தேர்வுக்கு அரசு சார்பில் மேற்கொண்டு வரும் சட்ட போராட்டங்களை போல பொது கலந்தாய்வுக்கும் சட்ட போராட்டம் நடத்தப்படும். மருத்துவக் கல்வியில் பொதுக் கலந்தாய்வு என்பது இந்த வருடம் இல்லை. அடுத்த வருடத்தில் கொண்டு வருவதற்கான முயற்சி ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை அடையாளப்படுத்தி தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனால் பொது கலந்தாய்வு கொள்கையை ஒருபோதும் தமிழ்நாட்டில் கொண்டு வர விடமாட்டோம்" என்றார்.

Also Read: ”மாணவர்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் ஆர்.என்.ரவி” .. முற்றுகை போராட்டம் அறிவித்த திமுக மாணவர் அணி!