Tamilnadu

செல்போனுக்கு வந்த link .. கிளிக் செய்தவரின் வங்கியில் இருந்து மாயமான பணம் : போலிஸ் விசாரணையில் பகீர்!

புதுவையைச் சேர்ந்தவர் கிருஷ்ணா சர்மா. இவர் ஜிப்மர் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் லிங் ஒன்று வந்துள்ளது. இந்த லிங்கை பதிவிறக்கம் செய்து கிருஷ்ணா சர்மா பயன்படுத்தியுள்ளார்.

அப்போது அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலிஸார், கிருஷ்ணா சர்மாவின் வங்கி கணக்கில் இருந்து ஜார்கண்ட்டில் உள்ள வங்கிக் கணக்கிற்குப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதைக் கண்டுபிடித்தனர். அதையடுத்து அந்த வங்கிக் கணக்கு யாருடையது? என போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் அந்த வங்கிக் கணக்கின் பயனாளர் சென்னைக்கு வந்தது போலிஸாருக்கு தெரியவந்தது. உடனே சைபர் கிரைம் போலிஸார் நேற்று சென்னையில் அந்த கும்பலை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அசாமுதின் அன்சாரி, மகேஷ்குமார் என்பதும் இவர்கள் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலிஸார் ரூ.35 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஜார்கண்டில் இருப்பதாகக் கைதானவர்கள் தெரிவித்தனர். அவரையும் பிடிக்க போலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Also Read: போதையில் ஒற்றை காட்டு யானையிடம் வம்பிழுத்த மீசை முருகேசன்.. தட்டி தூக்கிய வனத்துறை அதிகரிகள் !