Tamilnadu
"திண்டுக்கல் வருகிறேன்; தங்கப் பேனா தருகிறேன் !" - 600/600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைரமுத்து வாழ்த்து !
ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான இந்த 2022 - 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். மேலும் மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் என மொத்தம் 94% பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் 6 பாடங்களிலும் 100-க்கு 100 என்று 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். திண்டுக்கலில் அரசு உதவி பெரும் பள்ளியான அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவருக்கு ஆசிரியர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 600/600 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ள மாணவி நந்தினி, தனக்கு B.Com CA படிக்க வேண்டும் என்று ஆர்வம் தெரிவித்துள்ளார். கூலி தொழிலாளியின் மகள் கடின உழைப்பு மூலம் முழு மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ள மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், தனது பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் மாணவி நந்தினி.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி பயில்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் உறுதியளித்துள்ளார். இதையடுத்து எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து கவிப்பேரரசு வைரமுத்துவும் நேரில் சந்தித்து தனது தங்கப் பேனாவை பரிசாக அளிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது? அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன். உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!" என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!