Tamilnadu

"திராவிட மாடல் ஆட்சியை எந்த சக்தியாலும் அசைத்துப் பார்க்க முடியாது".. கொதித்தெழுந்த அமைச்சர் சேகர்பாபு!

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார்.

மேலும் இந்த ஆண்டு தொடங்கிய முதல் சட்டமன்ற கூட்டத் தொடரின் போதும், "சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லூயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்" போன்ற வார்த்தைகளை வேண்டும் என்றே தவிர்த்து தனது உரையை வாசித்தார்.

இப்படி தொடர்ச்சியாக மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்கு அளித்த போட்டி ஒன்றில், ‘திராவிட மாடல்’ அரசு என்று எதுவும் கிடையாது; ‘திராவிட மாடல்’ என்பது அரசியல் கோஷம் மட்டுமே! ‘திராவிட மாடல்’ கொள்கை எப்போதோ காலாவதியாகிவிட்டது. அதற்கு மீண்டும் உயிர்க் கொடுக்க நினைக்கின்றனர்’’ என்று கூறுகின்றார்.

மேலும், பழிவாங்கும் நோக்கத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயில் தீக்சிதர் வீட்டிலிருந்த சிறுமிகளுக்கு வலுக்கட்டாயமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஆளுநரின் இந்த குற்றச்சாட்டுக்குத் தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளது.

அதில், சிதம்பரம் நடராஜர் கோவில் தீக்சிதர்கள் மீது குழந்தை திருமண குற்றச்சாட்டுகள் வைத்து அவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், சிறுமியர் சிலருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததாகவும், இதனால் அவர்கள் தற்கொலை செய்ய முயன்றதாகவும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆளுநர் மாளிகையை அரசியல் மாளிகையாக மாற்றிய முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிதான் என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "ஆளுநர் மாளிகையை அரசியல் மாளிகையாக மாற்றிய முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிதான். எந்த வகையான குற்றச்சாட்டுகள் வந்தாலும் அதைச் சமாளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் சாதாரணமானவர் அல்ல. இரும்பு மனிதர்.

இதுபோன்ற ஏச்சு பேச்சுக்கு எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்த அளவிலும் தடுத்து நிறுத்த முடியாது. எத்தகைய புனையப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு செவிமடுக்காமல் வளர்ச்சியை நோக்கிச் செல்வதுதான் இந்த திராவிட மாடல்ஆட்சி. இந்த ஆட்சியைத் தொட்டுப் பார்க்கவோ அசைத்துப் பார்க்கவோ ஆட்டிப் பார்க்கவோ எந்த சக்தியாலும் முடியாது" என தெரிவித்துள்ளார்.

Also Read: திமுக அரசின் புகழை பொறுக்க முடியாமல் பொய்யும் புரட்டுமாய் ஒரு அறிக்கை: EPSக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!